செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இந்தியா அரபிக் கடலில் உள்ள தனது எல்லையில் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது.இந்த நிலையில் செங்கடலில் சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இரண்டு ஏவுகணைகளை அமெரிக்க போர் கப்பல் வெற்றிகரமாக நடுவானில் தாக்கி அழித்தது.பின்னர் 4 படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிங்கப்பூர் கப்பலில் ஏற முயன்றுள்ளனர். இதனால் அமெரிக்க கப்பற்படையின் ஹெலிகாப்டர் அந்த படகுகளை துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் மூன்று படகுகளை குறிவைத்து தாக்தி அழித்துள்ளது. ஒரு படகு தப்பிச் சென்று விட்டது. இதில் தங்களது குழுவை சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான விளைவு குறித்தும் எச்சரித்துள்ளது.நவம்பர் 19-ந்தேதியில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல் மீது 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக அமெரிக்க கப்பற்படை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குல் நடத்தி கொன்றுள்ளது.