தமிழக அரசின் தீயணைப்புத் துறை இணை இயக்குநர் என்.பிரியாவுக்கு, முதல் முறையாக மாநில அரசு அல்லாத குடிமைப்பணிகள் ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழக தீயணைப்புத் துறை இணை இயக்குநராக இருப்பவர் என்.பிரியா ரவிச்சந்திரன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கல்சா மகாலில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்தார். கடந்த 2003-ம் ஆண்டு குரூப் 1 பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிரியாவுக்கு, தற்போது மாநில அரசு அல்லாத குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டில் மத்திய அரசு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கியுள்ளது.
மாநில அரசில் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஆண்டுதோறும், குரூப் 1 அதிகாரிகளுக்கு மாநில அரசு பரிந்துரை அடிப்படையில், ஐஏஎஸ் அதிகாரிக்கான அந்தஸ்தை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரியாக பிரியா ரவிச்சந்திரனை தேர்வு செய்து, இதற்கான அறிவிப்பை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது தமிழகத்தில் இது முதல் முறையாகும்.