மதுரையில் விஜயகாந்துக்கு சிலை அமைக்க வேண்டும் என்று விருதுநகர் மக்களவை உறுப்பினர் (காங்கிரஸ்) மாணிக்கம் தாகூர், மதுரை மாநகராட்சி மேயருக்கு கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அவரது படத்துக்கு மாலை அணிவித்து தேமுதிகவினர் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் விஜயகாந்துக்கு சிலை மற்றும் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுரையில் விஜயகாந்துக்கு சிலை அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மாநகராட்சி இடம் கொடுத்து, அனுமதி வழங்கவேண்டும் என்றும் மேயர் இந்திராணிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, “மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்அனுப்பியிருந்தார். அவர் சார்பாக,காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அக்கட்சி யின் கவுன்சிலர்கள், என்னிடம் கோரிக்கை வைத்தனர். அவர் களுடைய கோரிக்கையை, அமைச்சர்கள் மூலம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசென்று, பரிசீலிக்கப்படும்” என்றார்.