மோசடிக்காரர்களிடமிருந்து ஆட்சியை பறிக்க மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

88 0

நாட்டை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தேர்தலுக்கான ஆண்டாகும்.

எனவே அவ்வாறான மோசடிக்காரர்களான அரசியல்வாதிகளிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களாலேயே நாடு இன்று இவ்வாறான நிலையில் உள்ளது. அந்த வழியில் வந்தவர்களே இன்றும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

எனவே அவர்களது ஆட்சியின் கீழ் குறுகிய காலத்துக்குள் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று மக்கள் எதிர்பார்க்கக் கூடாது.

எனவே மோசடிக்காரர்களான அரசியல்வாதிகள் தொடர்பில் அறிந்து, அவர்களிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் யார் வந்த எந்த வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எனவே ஊழல், மோசடியற்ற நாட்டை நேசிக்கும் தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

நிவாரணங்களுக்காகவும், சமூர்த்தி கொடுப்பனவுகளுக்காகவும் வாக்களித்தால் கடந்த ஆண்டைப் போன்று மீண்டும் அனைத்தையும் இழக்க நேரிடும்.

இவ்வருடம் அரசியலமைப்புக்கேற்ப அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். ஆனால் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை எனினும் மீண்டும் மக்கள் ஏமாற்றப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.