தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்தகிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.
திமுக ஆட்சியில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் முடிந்ததைத் தொடர்ந்து, அண்மையில் வெள்ளோட்டமும் விடப்பட்டது. இந்நிலையில் இப்பேருந்து முனையம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இதில்முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பேருந்து முனையத்தை திறந்துவைத் தார்.
அதைத்தொடர்ந்து, பேருந்து நிலைய நுழைவாயிலில் முன்னாள்முதல்வர் கருணாநிதி சிலையைதிறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள், அரசு போக்குவரத்துப் பேருந்துகள், மாநகர போக்குவரத்துப் பேருந்துகள்என முதற்கட்டமாக 10 பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
மேலும் இப்பேருந்து முனையத்தில் ஆவின் பாலகம் அமைப்பதற்கான அனுமதி ஆணையை மாற்றுத் திறனாளி பயனாளி ஒருவருக்கு வழங்கி, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் சிறப்பை விளக்கும் காணொலிக் காட்சியைப் பார்வையிட்டார்.
பேருந்து முனைய வசதிகள்: இப்பேருந்து முனையம் 6 லட்சம்சதுரஅடி பரப்பளவில் 2 தரைகீழ்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும். 28.25 ஏக்கர்பரப்பளவில் வாகன நிறுத்துமிடம்,கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
ஓய்வறைகள்: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பேருந்து நடைமேடைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ‘க்யூஆர்’ கோடு மூலம் டிக்கெட்கள் வழங்கும் வசதி, 2 அடித்தளங்களில் 324 கார்கள், 2,769 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஆகியவை உள்ளன.
பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் உள் ளிட்டவை உள்ளன.
ரூ.140 கோடியில் ‘ஸ்கைவாக்’: இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, ‘‘கடந்த ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து முனையப் பணிகள் 30 சதவீதம் மட்டுமே முடிவடைந்தது. 70 சதவீதபணிகள் இந்த ஆட்சியில் முடிக்கப்பட்டன. சிறு மழை பெய்தாலே குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. அதற்காக ரூ.13 கோடியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டது. 8 கிமீ நீளத்துக்கு முழுமையான சாலை அமைக்கப்பட்டது.
6 ஏக்கரில் ரூ.11 கோடியில் அழகிய பூங்கா மற்றும் 16 ஏக்கரில் ரூ.13 கோடியில் காலநிலை பூங்கா ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பேருந்து நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பயணிகள் பயணிப்பார்கள். ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.140 கோடியில் ஸ்கைவாக் பணி தொடங்க உள்ளது’’ என்றார்.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து நிலையத்தில் மட்டும் நடைமேடைகளில் குறைவான இருக்கைகள் உள்ளன. ஆனால் மாநகரப் பேருந்து இயக்கப்படும் பகுதிகளில் ஒரு இருக்கை வசதிகூட இல்லை. எனவே அந்தப் பகுதியில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முனையத்தில் இலவச தனியார்மருத்துவமனையும் அமைக்கப்பட் டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்எல்ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி, போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.