அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம்

63 0

எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும்.

மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் மும்மொழிகளிலும் தேர்ச்சியுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் களமிறங்கினால், தான் அவரை ஆதரிப்பதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்துவதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்துவதால் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியதைப்போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடுமல்லவா எனவும், 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தமை அவர்களுக்குப் பாதிப்பாக அமைந்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் பற்றியும் வினவியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

2005 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மாத்திரமன்றி, கூட்டமைப்பினரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ்மக்களை வலியுறுத்தினார்கள்.

இருப்பினும் அப்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்க மிகவும் நல்லவர் எனவும், தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார் எனவும் கருத்தக்களை வெளியிட்டனர்.

ஆனால் உண்மையில் யுத்தம் முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வளவு மோசமாக செயற்படுகின்றார் என்று பாருங்கள்.

ஏற்கனவே ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன) எழுச்சியின்போது ரணில் விக்ரமசிங்க எவ்வாறு நடந்துகொண்டார் என்பதும், அதற்கு சிறந்த உதாரணமான ‘பட்டலந்த முகாம்’ பற்றிய கதைகளும் அனைவருக்கும் தெரியும்.

எனினும் இப்போது அவர் எவ்வாவு மோசமானவர் என்பது மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

ஆகவே 2005 இல் தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரித்திருக்காவிடின் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றிருந்தாலும், அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்கீழ் இடம்பெற்றதைப்போன்ற மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும்.

ஆனால் அது இப்போது சர்வதேச ரீதியிலும், மேற்குலகநாடுகள் மத்தியிலும் பரவலாகப் பேசப்படுவதைப்போன்று பேசப்பட்டிருக்காது. மேற்குலகம் ரணிலுக்கு ஆதரவாகவே செயற்பட்டிருக்கும். எனவே சமகால கள நிலைவரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் 2005 இல் தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததில் எந்தவொரு பிழையும் இல்லை.

இன்றளவிலே தமிழ்மக்கள் சார்ந்த விவகாரங்கள் கணக்கிலெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அதற்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்திருக்கின்றன.

எனவே நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தனியொரு தேர்தலாகவன்றி, எதிர்காலத்தேர்தல்களை எவ்வாறு அணுகவேண்டும் என்ற ரீதியிலேயே பார்க்கின்றோம்.

இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கிப் போட்டியிடுவதால், அவர் வெல்லப்போவதோ அல்லது தமிழ்மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் கிட்டப்போவதோ இல்லை.

எனவே தமிழர் தரப்பில் எவ்வித இழப்புக்களுமின்றி, அதேவேளை மிகவும் வலுவான செய்தியை பெரும்பான்மையின மக்களுக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூறுவதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பமாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதுகின்றோம்.

அவ்வாறிருக்கையில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டும் என்று கூறுவதெல்லாம், அவர்களுக்கு விருப்பமான ஏதோவோரு தரப்பை (சிங்கள வேட்பாளரை) ஆதரிப்பதற்காக மாத்திரமேயாகும் என்றார்.

அவ்வாறெனில் ‘சி.வி.விக்கினேஸ்வரன் கூறுவதுபோல் நீங்கள் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதற்கு முன்வரலாமல்லவா? அதனூடாக நீங்கள் கூறவதைப்போன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்தலாம் அல்லவா?’ என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

‘எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும்.

மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும்.

ஆகவே தமிழ்மக்கள் பழைய கதைகளை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறாமல், இவ்விடயத்தில் நன்கு சிந்தித்து தீர்மானமொன்றை மேற்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.