பாதை மாறினால் சர்வதேசம் நம்மைக் கைவிடும்

55 0

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பில் எந்தவொரு அரசாங்கமும் மீள்பேச்சுவார்த்தையை நடத்தலாம். ஆனால் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள பாதையைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான நிதியியல் உறுதிப்பாட்டு நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று  வெள்ளிக்கிழமை (29) இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி மேலும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் கீழான பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக்கொண்டு தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பாதை முறிவடைந்தால், அதன்பின்னர் சர்வதேச சமூகத்திடமிருந்து எந்தவொரு உதவியும் கிட்டாது எனவும் எச்சரித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிதிவசதிச்செயற்திட்டம் கடந்த ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பமானது.

அச்செயற்திட்டத்தின் பிரகாரம் முதலாம் கட்ட நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட நிதியை விடுவிப்பதற்கு நாம் பூர்த்திசெய்யவேண்டிய நிபந்தனைகள் என்னவென்பது பற்றி மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

எனவே அடுத்த 4 வருடங்களுக்கு எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், உரிய காலப்பகுதியில் கொள்கைகளில் அவசியமான மாற்றங்களை மேற்கொள்வதை முன்னிறுத்தி மீள்பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய அவசியத்தைக் கொண்டிருக்கும் தொடர் செயன்முறையே இதுவாகும்.

அதற்கு எவ்வித மட்டுப்பாடுகளும் இல்லை. இருப்பினும் இச்செயற்திட்டத்தின் ஊடாக சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் நாம் முன்நோக்கிப் பயணிக்கவேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி நாணய நிதியத்தின் இச்செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பதனாலேயே சர்வதேச நாடுகளின் அரசாங்கங்களும், ஏனைய வர்த்தகத் தரப்புக்களும் இலங்கைக்குக் கடன்சலுகைகளை வழங்கியிருப்பதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

‘கடன்மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் 10 வருடகாலப்பகுதியில் நாம் தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிக்கவேண்டும்.

மாறாக அதில் மாற்றங்கள் ஏற்படின், அவர்களும் கடன்சலுகை தொடர்பான அவர்களது தீர்மானத்தில் மாற்றங்களை மேற்கொள்வர்.

எனவே இப்பாதை முறிவடைந்தால், இதற்கு இனியும் ஆதரவு வழங்கமாட்டோம் என அவர்களால் கூற முடியும். அதன்பின்னர் நாம் வருடாந்தம் 6 பில்லியன் டொலர் கடன்களைத் திருப்பிச்செலுத்தவேண்டியிருக்கும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.