இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு ஜனவரியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு திட்டமிட்ட வகையில் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
எனினும், கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தின் கிளைத்தெரிவுகள் சம்பந்தமாக சில விடயங்களை எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
ஆகவே, அந்த விடயங்கள் சம்பந்தமாக அவருக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் நாம் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தினை அவருடைய கொழும்பு இல்லத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அத்தோடு, கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் சம்பந்தமாகவும் சம்பந்தனின் கருத்துக்களையும், அவருடைய பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
இதனையடுத்து. கட்சியின் மத்திய குழுக் கூட்டமொன்றையும் கூட்ட வேண்டியுள்ளது. அதன்போது கட்சி மாநாடு பற்றிய அனைத்து விடயங்களும் இறுதி செய்யப்படும் என்றார்.