உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஒருபோதும் ஏற்கோம்!

115 0

பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற ரீதியில் தம்முடன் எவ்வித கலந்துரையாடலோ அல்லது தமது ஒப்புதலோ இன்றி உருவாக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாதேவி, இவ்விடயத்தில் சுவிட்ஸர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்க இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை உறுதிப்படுத்தி சிறந்ததொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதை நோக்காகக்கொண்டே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும், இம்முயற்சிக்கு அனைத்து தமிழ்த்தரப்புக்கள் உள்ளடங்கலாக சிறுபான்மையின மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறைகூவல் விடுத்துள்ளார்.

அதுமாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாகவும், அதற்குரிய சட்டமூல வரைவு எதிர்வரும் ஜனவரி மாதம் வர்த்தமானி ஊடாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், அச்சட்டமூலம் தொடர்பில் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைக் கேட்டறிந்து, அவசியமேற்படின் திருத்தங்களை மேற்கொண்டு, அதற்குப் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம் தொடர்பில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினருடனும், அவர்கள் சார்ந்து இயங்கிவருகின்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் உரியவாறான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை என பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாதேவி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம் குறித்தோ அல்லது அதற்குரிய சட்டமூல வரைபு தயாரிப்பு குறித்தோ பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற ரீதியில் எம்முடன் எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தமது தேவைப்பாடுகள் என்னவென்பதை அறியமுற்படாமல், தமது ஒப்புதலின்றி உருவாக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்த அவர், ஏற்கனவே அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களின் பயனற்றதன்மை குறித்து சுட்டிக்காட்டினார்.

மேலும் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், சுவிட்ஸர்லாந்து தூதுவர் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஆகிய இராஜதந்திரிகளிடம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்ததாகவும், அதனை செவிமடுத்த அவர்கள் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததாகவும் தெரிவித்த லீலாதேவி, இருப்பினும் தற்போது அதற்கு முற்றிலும் முரணான விதத்தில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளியிட்டார்.