இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கி வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை கௌரவப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் ஏற்பாட்டில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளமையும் இதற்கு மற்றுமொறு சான்றாகும் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வு இன்று (30) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டமை குறித்து ஜீவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையிட்டு வருந்துகின்றேன். எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி எமது கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
அதேபோல பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கு மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த உறவுப் பாலமாக அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் இருந்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு என்றும் நாம் ஒத்துழைப்புகளை வழங்குவோம்.
மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் பல உதவிகளை செய்துள்ளது. வீடமைப்புத் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், தொழில் பயிற்சிகள் என அந்த பட்டியலை நீடித்துக்கொண்டே செல்லலாம்.
இந்நிலையில் எமது மக்களை கௌரவப்படுத்தி நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை எமது மக்கள் மீதான இந்தியாவின் கரிசனையை உறுதிப்படுத்துகின்றது என்றார்.