மட்டக்களப்பு பெரியகல்லாறு ஆற்றுவாய் வெட்டப்பட்டது

87 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த பலத்த மழை இன்று (30) சற்று ஓய்ந்துள்ளது. எனினும், வெள்ள நீர் வழிந்தோட வழியின்றி கிராமங்களுக்குள்ளும், அங்குள்ள வீதிகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் தேங்கிக் கிடப்பதனால் மக்கள் பலத்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு, பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள ஆற்றுவாய் வெட்டிவிடப்படும் பட்சத்தில் மிக விரைவாக வெள்ள நீர் வழிந்தோடுவதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பாக, மீனவர்கள், விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கிணங்க, இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி ந.நாகரெத்தினத்துக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய சனிக்கிழமை(30) காலை பெரியகல்லாறில் அமைந்துள்ள முகத்துவாரம் (ஆற்றுவாய்) பெக்கோ இயந்திரத்தின் மூலம் அகழப்பட்டு, வெள்ளநீரை கடலுக்குள் அனுப்பும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆற்றுவாய் வெட்டும் பணி இடம்பெறும் இடத்துக்கு இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாக அவரது செயலாளர் பூ.பிரசாந்தன், நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி ந.நாகரெத்தினம், நவகிரி பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் சு.கிசோகாந், மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் சென்று பார்வையிட்டனர்.

தமது கோரிக்கைக்கிணங்க, ஆற்றுவாய் வெட்டி, தேங்கியுள்ள வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.