கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது மகள் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கஹவத்த – வெல்லதுர பிரதேசத்தைச் சேர்ந்த வினிதா ஜயசுந்தர என்ற 71 வயதுடைய தாயாவார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட உயிரிழந்தவரின் 38 வயதுடைய இளைய மகள் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு பாலமடுல்ல நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாயும் மேசன் தொழிலாளியுமான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று உயிரிழந்தவரின் வீட்டிற்கு மேசன் வேலை செய்ய வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் உயிரிழந்தவரின் நகைகளை திருடி தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் சந்தேக நபரின் தொலைபேசிக்கு 9 முறை அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரை வீட்டிற்கு அழைத்த பெண் திருடிய நகைகளுக்கான பணத்தை கொடுக்கவில்லையெனில் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடளிப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணை தள்ளி விட்டுள்ளார். இதனால் சுவரில் மோதப்பட்டு காயமடைந்த பெண் தரையில் வீழ்ந்த நிலையில் சந்தேக நபர் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் வீடு திரும்பிய சந்தேக நபர் வீட்டில் சிதைந்திருந்த இரத்தங்களை கழுவி விட்டு பொலிஸாரின் கவனத்தை திருப்புவதற்காக வீட்டிலுள்ள தகரம் ஒன்றை உயிரிழந்தவரின் கழுத்தில் குத்திவிட்டு சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பாலமடுல்ல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.