அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுப்பட்டு வரும் இந்து கோயிலை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபி அருகே முரேகாவில் 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்படுகிறது. கடந்த 2018 பிப்ரவரியில் இக்கோயில் கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி, பராமரித்து வரும் பாப்ஸ் (பிஏபிஎஸ்)அமைப்பு அபுதாபி கோயிலையும் கட்டி வருகிறது. இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இக்கோயில் 2024 பிப்ரவரி 14-ம் தேதி, பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சுவாமி ஈஸ்வர சந்திர தாஸ், பிரம்ம விகாரி தாஸ் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் கடந்த புதன்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவும் கோயிலை பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்து வைக்கவும் அழைப்பு விடுத்தனர். இதனை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதாக பாப்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவின் புனிதத் தலங்களை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துவதில் பிரதமர் மோடி சிறப்பானபணியாற்றியுள்ளார். இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அவரது கணிசமான பங்களிப்புகளை போற்றும் விதமாக, இந்த சந்திப்பின்போது மாலையும் காவி பொன்னாடையும் அணிவித்து பிரதமர் மோடி கவுரவிக்கப்பட்டார்.
அபுதாபி கோயிலின் கம்பீரமானவடிவமைப்பு மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து பிரதமரிடம் சுவாமி பிரம்ம விகாரி தாஸ் எடுத்துரைத்தார். வரவிருக்கும் திறப்பு விழா, உலகளாவிய ஒற்றுமையை குறிக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்றும் அவர் விவரித்தார்.
அபுதாபி கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்திற்காக ஐக்கிய அமீரக அரசு 17 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதற்காக ஐக்கிய அமீரக அரசுக்கு பிரதமர் மோடி ஏற்கெனவே நன்றி தெரிவித்திருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 35 லட்சம் இந்தியர்கள் இக்கோயில் திறக்கப்படும் தினத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.