சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலவிவரும் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கிலும், கடந்த 2018-ம்ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்தகிளாம்பாக்கத்தில் 86 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிகுழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400கோடியில் புதிய பேருந்து நிலையம்கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்த பிறகும், பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. பணி முடிவடையும் நிலையில், பேருந்து நிலையப் பகுதியில் மழைநீர் அதிகஅளவில் தேங்கியது. இதையடுத்து,சிஎம்டிஏ சார்பில் புதிய திட்டம் வகுக்கப்பட்டு, மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்லும் பாதையில் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் முடிந்ததை தொடர்ந்து, சமீபத்தில் வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டு, பேருந்து நிலையம் திறப்புவிழாவுக்கு தயாரானது.
இந்நிலையில், ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுகாலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்துவைத்து, மரியாதை செலுத்துகிறார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.சென்னைமற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
இதன் 2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும். பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள், உணவகங்கள், துரித உணவகங்கள், பயணச்சீட்டு முன்பதிவு மையம், மருத்துவ மையம்,புறக்காவல் நிலையம் உள்ளிட்டவையும் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு முன்பு பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆங்கில புத்தாண்டுக்கு முன்பாகவே பேருந்து நிலையம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.