சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த எஸ்.லீலா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் அண்ணாமலைபுரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை ரூ.1.23 கோடிக்கு வாங்கினேன். கார்பஸ் தொகை என தனியாக ரூ. 50 ஆயிரமும் செலுத்திவிட்டேன். இந்த வீடு கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பல லட்சம் செலவில் உள் அலங்கார வேலைகளையும் செய்துள்ளேன். ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி வர்ணம் பூசுதல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைகளை வீட்டுவசதி வாரியம் செய்து கொடுக்கவில்லை.
இந்த வேலைகளை செய்து கொடுக்கும்படி வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் செயற் பொறியாளரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து, தங்களின் சுயலாபத்துக்காக செயல்படுவதால்தான் ஏற்கெனவே வீட்டுவசதி வாரியம் சார்பில் அயனம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 5 ஆயிரம் வீடுகள், சோழிங்கநல்லூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளன.
மேலும், தரமற்ற பொருட்களைக் கொண்டு இந்த அடுக்குமாடி வீடுகளை கட்டியிருப்பதால் இவற்றின் உறுதித்தன்மை மற்றும் தரப் பரிசோதனை தொடர்பாக, சென்னை ஐஐடி நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
அதிக பொருட்செலவில் இந்த வீட்டை வாங்கியும், தற்போது நிம்மதியில்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, இது தொடர்பாக நான் உட்பட, வீடு வாங்கிய பலர் அளித்துள்ள மனுவைப் பரிசீலிக்குமாறு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இது தொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர், செயற் பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜன. 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.