சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகின்றது

82 0

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சொத்துக்களின் பங்கீட்டில் சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகின்றது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் ‘எமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்பல்: ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் மனிதவள அபிவிருத்திக்கான புதிய வழிமுறைகள்’ எனும் மகுடத்திலான 2024 ஆம் ஆண்டுக்கான பிராந்திய அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் பிரகாரம் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் சொத்துக்களின் பங்கீட்டில் சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இலங்கை, தாய்லாந்து, சீனா, மியன்மார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. அதேபோன்று வருமானப்பங்கீட்டிலும் இலங்கை சமத்துவமற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக உயர்மட்டத்திலுள்ள ஒரு சதவீதமான இலங்கையர்கள் தனிப்பட்ட மொத்த சொத்துக்களில் 31 சதவீதமானவற்றைத் தம்வசம் வைத்திருப்பதுடன், கீழ்மட்டத்திலுள்ள 50 சதவீதமானோருக்கு நாட்டின் மொத்த சொத்துக்களில் வெறுமனே 4 சதவீதத்தை விடவும் குறைந்த அளவிலான சொத்துக்கள் மாத்திரமே பகிரப்பட்டுள்ளன.

அதன்படி ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் அநேகமான நாடுகளில் அடிமட்டத்திலுள்ள 50 சதவீதமான மக்கள் மத்தியில் பகிரப்பட்டுள்ள மொத்த சொத்துக்களின் பெறுமதி 6 சதவீதத்துக்கு மேற்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் அதன் அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளது. அதுமாத்திரமன்றி சமூகத்தின் 10 சதவீத செல்வந்த வர்க்கத்தினர் மொத்த சொத்துக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றைத் தொடர்ந்து அனுபவித்துவருவதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றும், அதன்விளைவாக ஏற்பட்ட முடக்கமும் இப்பிராந்தியத்திலுள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்களை வெகுவாகப் பாதித்துள்ளது.

அதன் காரணமாக முறைசாரா தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படும் சுற்றுலாத்துறை, வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மற்றும் உற்பத்தித்துறை ஆகியவற்றின் மூலமான வருமானத்தை பல நாடுகள் இழந்துள்ளன.

அதேபோன்று இவ்வழுத்தங்கள் குறிப்பாக தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியப் பிராந்திய நாடுகளின் சுகாதாரத்துறையில் நிலவும் பலவீனத்தைத் தெள்ளத் தெளிவாகக் காண்பித்துள்ளன’ எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.