கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த இளம் தாதியின் உடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய இளம் தாதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
குறித்த தாதி 2018 ஆம் ஆண்டு தனது பயிற்சிக் காலத்தை முடித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய நோய் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் திகதி பண்டாரவளை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு விடுமுறையில் சென்றிருந்த நிலையில், 26ஆம் திகதி சுற்றுலா பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில்,மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (27) தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்தியர் எச்.கே.என்.சுரங்கவினால் அவரது சடலம் மீதான பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற்கொண்ட பண்டாரவளை மரண விசாரணை அதிகாரி மேனகா ரத்நாயக்க, உடல் உறுப்புகளை ஒப்படைப்பதற்கு திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தொடர்ந்து உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு சந்துனி சுலோச்சனாவின் இறுதிக் கிரியைகள் பெருந்தொகையான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று (28) பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.