காசோலைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களின்போது மேற்கொள்ளப்படும் மோசடிகள், முறைகேடுகள் மற்றும் புறக்கணிப்புகள் காரணமாக இலங்கையில் வர்த்தக சமூகம் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அது தொடர்பான சட்டங்களை தற்காலத்துக்கு பொருத்தமான முறையில் திருத்தம் மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன தலைமையிலான நிபுணர்கள் குழுவொன்று இந்த வருடத்தின் முற்பகுதியில் நியமிக்கப்பட்டிருந்தது.
தற்போதுள்ள மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் 95 வருடங்கள் பழைமை வாய்ந்த 1927ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சட்டமாகும்.
அதன் பிரகாரம். குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்கள் குழுவினால் தேசிய மற்றும் சர்வதேச சட்ட நிலைமைகள் தொடர்பாக ஆய்வுசெய்து, சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய முறை தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து, அதன் குழு அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (29) நீதி அமைச்சில் இடம்பெற்றது.
காசோலை மூலம் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும்போது இடம்பெறுகி்ன்ற மோசடிகள், முறைகேடுகள் மற்றும் புறக்கணிப்புகள் தொடர்பாக இருக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்த குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ள இருக்கிறது என நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.