மினுவாங்கொடை, பன்சில்கொட பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்

67 0

ஒன்றரை வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை, பன்சில்கொட பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பேரில், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் உள்ள அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு கூட்டுத்தாபனம் நேற்று வியாழக்கிழமை (28) இங்கு நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும். அதே நேரத்தில், இந்த இடத்திற்கு அருகில் மேலும் இரண்டு சிறிய பாலங்கள் கட்டப்படும். இதில் ஒரு பாலம் கட்டும் பணி ஏற்கனவே முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 120 மில்லியன் ரூபாவாகும்.

இந்த திட்டத்தின் பணிகள் மார்ச் 2021 இல் தொடங்கப்பட்டதுடன் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த பாலம் கட்டி முடிக்கப்படாததாலும், அது தொடர்பான தற்காலிக வீதியை பராமரிக்காததாலும் கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த இடத்தில் இருந்த இரும்பு குழாய்களை திருடர்கள் எடுத்துச் சென்றதால் குழந்தை ஒன்றும் இவ்விடத்திலிருந்து தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த பாலம் கட்டி முடிக்கப்படாமை மற்றும் தற்காலிக வீதியை பராமரிக்காமை தொடர்பில் அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளின் கவனத்திற்கு மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க அவர்கள் கொண்டுவந்தார். அதன்பின்னர், திட்டம் தொடர்பான முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு வழங்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் தேவையான பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் கலந்துரையாடினார். இதன்படி நெடுஞ்சாலைகள் அமைச்சினால் உரிய பணம் ஒதுக்கப்பட்டு அதன்படி இன்று இங்கு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் பாலம் அமைந்துள்ள பன்சில்கொட வீதி, மினுவாங்கொடை ஊடாக கம்பஹா செல்வதற்கான இலகுவான வழியாகும். இந்த பாலம் அமைப்பதன் மூலம் 10 கிராமங்கள் பயன்பெறும். இது தொடர்பில் கருத்து தெரிவித்த மினுவாங்கொடை உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் குமார அரங்கல்ல, இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் எனவும், இதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். நாடு மீண்டுள்ளது என்பதற்கு இது ஒரு நல்ல சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் மினுவாங்கொடை பிரதேச செயலாளர் செல்வி தனுஜா ராஜகருணா, அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் அளவீட்டாளர் அனுர சம்பத் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.