நாடளாவிய ரீதியில் முற்படைகளால் மேற்கொண்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதனால் அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் கட்டிடங்களில் கைதிகளை தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிராேத நடவடிக்கைகளை கைதுசெய்யும் யுக்திய வேலைத்திட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தடுத்துவைக்க எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் முற்படைகளால் மேற்கொண்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக சிறைச்சாலைகளில் தற்போது இட நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாடு பூராகவும் உள்ள 28 சிறைச்சாலைகளிலும் இரண்டாயிரத்து 255க்கும் அதிகமான புதிய கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றளர்.
அத்துடன் யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்க முன்பதாக சிறைச்சாலைகளில் 28ஆயிரம் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக இந்த நாட்டில் சிறைச்சாலைகளில் 11ஆயிரம் பேரே தடுத்து வைக்க முடியும். அதேநேரம் பெண் கைதிகளின் எண்ணிக்கையும் 800இல் இருந்து ஆயிரத்தி 124 வரை அதிகரித்திருக்கிறது.
அத்துடன் சிறைச்சாலைகளின் நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாக மில்லனிய பிரதேசத்தில் 50ஏக்கர் காணி தெரிவுசெய்து அங்கு கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. என்றாலும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் பாதுகாப்பான கட்டிடங்களை தெரிவுசெய்து, சிறைச்சாலைகளில் இருக்கும் மேலதிக கைதிகளை குறித்த கட்டிடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.