19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி

106 0
இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, கவுன்டி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மிட்ல்செக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

7 வயது சிறுமியாக இருந்தபோது அமுவின் ஆற்றலை நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகம் முதன் முதலில் இனங்கண்டது.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தில் பிரித்தானியாவில் பிறந்த அமு, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து குழாத்தில் இணைந்து உயர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார்.

உள்ளூர் மகிளிர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, அடுத்த வருடம் இலங்கை வருகை தரவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் அடுத்த வருடம் விளையாடும்போது அமுவும் அத் தொடரில் இடம்பெறுவார் என இலங்கை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அமு இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ். சென். ஜோன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார்.

1990இல் நடைபெற்ற 87ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் அவர் குவித்த 145 ஓட்டங்கள் இன்னிங்ஸ் ஒன்றில் ஒருவர் பெற்ற சாதனைக்குரிய அதிகூடிய எண்ணிக்கையாக இருக்கிறது.

பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த சிவா சுரேன்குமார் அங்கு லோகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் சிரேஷ்ட புதல்வியாக அமுருதா 2006ஆம் ஆண்டு பிறந்தார்.

அமுருதாவின் ஆற்றல் குறித்து கருத்து வெளியிட்ட நோர்த் லண்டன் கிரிக்கெட் கழக அதிபர் மாட்டின் இஸிட், ‘அவரிடம் குடிகொண்டுள்ள இயல்பான கிரிக்கெட் ஆற்றல்கள்,   கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை என்பன அவரை கண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எங்களைப் பிரமிக்கவைத்தன. அடுத்த தலைமுறையில் அதி உயிரிய ஆற்றல் மிக்க வீரராங்கனைகளை இனங்காணத் துடிக்கும் தேர்வாளர்களை அமுருதா வெகுவாக கவர்ந்துள்ளார்’ என்றார்.

தனது முன்னேற்றத்தைப் பயன்படுத்தி விளையாட்டில்  பெண்களின் பங்கேற்பை மேம்படுத்த விரும்புவதாக அமு தெரிவித்துள்ளார்.

‘கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை வளர்க்க நான் விரும்புகிறேன். உதாரணமாக பெண்கள் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிமாக வெளியிடவேண்டும். அத்துடன் கிரிக்கெட்டில் அதிகளவிலான பெண்களை ஈடுபடச் செய்யவேண்டும். நான் எனது பெற்றோரினால் உந்தப்பட்டேன். ஜொ ரூட் (இங்கிலாந்து வீரர்), அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை எலிஸ் பெரி ஆகியோரே எனது முன்மாதிரி’ என அமு தெரிவித்தார்.