யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஊடகவியலார்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட கலந்துரையாட லிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த மூன்று தசாப்தங்களாக பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவந்து தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்த பலமாக முயற்சித்து வருகின்றோம்.
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமென பெரும்பான்மையான சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அதேபோல் நாட்டில் இனவாதமும் இல்லாமல் இல்லை. தெற்கில் சிங்கள மக்களைக் குழப்பும் சில இனவாதிகளைப்போல் வடக்கிலும் சில இனவாதிகள் தமிழ் மக்களைக் குழப்புகின்றனர். அவைகளைக் கட்டுப்படுத்தவேண்டுமாயின் ஊடகங்கள் சரியாகச் செயலாற்றவேண்டும்.
எனினும், ஒருசில ஊடகங்கள் எனது கருத்தை இனவாதமாக மாற்றிப் பிரசுரிக்கின்றன. சிங்களத்தில் மாத்திரமல்ல தமிழிலும் இது நடைபெறுகின்றது. இது மக்கள் மத்தியில் செல்லும்போது குழப்பம் உருவாகின்றது.
இதேபோல்தான் நயினாதீவில் பெளத்த சிலை உருவாக்குவதிலும் எனது பங்களிப்பு அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். இந்த நடவடிக்கைகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் என்னை தவறான வகையில் சித்தரித்து வருகின்றனர். நான் இனவாதி அல்ல. நான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே விரும்புகின்றேன். அத்துடன் இன்று நாம் பலமான நல்லிணக்க பயணத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிகளை தமிழ், சிங்கள இனவாதிகள் தடுக்க வேண்டாம்.
மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால், காவல்துறையினரின் எதிர்ப்பையும் மீறி அவர் விடுதலை செய்யப்பட்டார். சிங்கள மாணவர்கள் தற்போது அச்சத்திலுள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும். எனவும் தெரிவித்தார்.