இஸ்ராயேல் மக்கள் பல்லாயிரம் வருடங்களான தமது அடிமைத்தனத்திலிருந்து மீட்க மெசியா பிறப்பாரென எதிர்பார்த்ததாகத் திருவிவிலியம் பல இடங்களில் தெரிவிக்கின்றது.
இன்றும் அதே மனிதன் தனது இனத்தின் விடியலைத்தேடி சொந்த நாட்டிலேயே அகதியானது மட்டுமல்ல, புலம்பெயர்ந்தும் அகதியாக அலைகின்றனர்.
ஈழத்தீவில் அடிமைப்பட்ட தமிழ் மக்களை மீட்டெடுக்க கார்மழை பொழியும் மாதத்தில் ஒரு தேவ மகன் பிறந்தான். தமிழ் இனத்திற்காக சிலுவை சுமந்தான்.
மார்கழி நள்ளிரவில் பிறந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடுகின்றோம். ஆனால், அந்த குழந்தை எம்மாக தன் பிறப்பின் ஊடாக கொண்டுவந்த விடுதலையை, மீட்பை அனைவரும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதுவே உண்மையான பாலன் பிறப்பு கொண்டாட்டமாக அமையும்.
“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக்கா 2:14) என்று வானதூதர்கள் பாடியது, உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் என்பதாகும்.
அமைதியை உருவாக்குவதே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பதை நாம் உணர்ந்திருந்தால், குழு சேர்த்து, சதி செய்து குழிபறிக்கும் முயற்சிகள், பல்வேறு முரண்பாடுகள் எதற்காக?
மார்கழிக் கடுங்குளிரில், பிரசவ வலியில் மரி அன்னை துடி துடித்தும், சத்திரத்திலும் இடம் கொடாது கதவை மூடிய மனிதர்களாக நாம் இன்றும் வாழ்கின்றோம்.
பாவ இருள் சூழ்ந்த உலகில் வாழும் மனிதருக்கு தன் மகனை ஆண்டவர் ஒளியாக அனுப்பி வைத்தார். இந்த ஒளி கிடைத்தும் பார்வை அற்றவர்களாக நாம் வாழ்வதற்கு காரணம் எம் அக்கண்கள் மூடப்பட்டிருப்பதே.
இறைமகன் இயேசுவின் பிறப்பு வரவேற்வோம் ! பாலகன் இயேசுவே எம் பேரொளி அவரின் பிறப்பே எமக்கான விடியல்.