உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, தூத்துக்குடி, சென்னை – சாந்தோம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை, கொடைக்கானல், குமரி, காஞ்சிபுரம், புதுச்சேரி, உதகை உட்பட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இந்த தேவாலயங்கள் அனைத்தும் வண்ண மயமாக காட்சி அளித்தது. இங்கு அமைக்கப்பட்டு உள்ள குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. தலைநகர் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, கோவா, மகாராஷ்டிரா உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகனில் அமைந்துள்ள தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்தவ சமயத்தின் தோற்றத்துக்குக் காரணமானவரான இயேசுவின் பிறந்தநாள் உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் மாதம் என்று நினைவுகூருமளவிற்கு இப்பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.