தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கோஷ்டி தலைவர்கள் ஒவ்வொருவரும் பதவியை பிடிக்க மற்றவர்கள் பற்றிய புகார்களை அடுக்கடுக்காக டெல்லிக்கு அனுப்பி உள்ளதால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. 40 நாட்களாக தலைவர் நியமிக்கப்படாததால் தமிழக காங்கிரசில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு, ஜெயக்குமார், டாக்டர் செல்லக்குமார், வசந்தகுமார், சுதர்சன நாச்சியப்பன், விஜயதாரணி உள்ளிட்ட பலர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
தலைவர் பொறுப்பு கேட்ட ஒவ்வொருவரையும் ராகுல் காந்தி தனித் தனியே அழைத்து பேசினார். அப்போது தமிழக தலைவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு தலைவர் பதவி கொடுத்தால் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளித்தனர்.ஆனால் கட்சியில் தங்களுடைய பங்களிப்பு, செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி யாரும் விளக்கம் அளிக்கவில்லை.
மேலும் கோஷ்டி தலைவர்கள் ஒவ்வொருவரும் பதவியை பிடிக்க மற்றவர்கள் பற்றிய புகார்களை அடுக்கடுக்காக டெல்லிக்கு அனுப்பினர். பதிவு தபால் மற்றும் பேக்ஸ் மூலமாக ஒருவரை ஒருவர் குறை கூறி அனுப்பிய ஆதாரங்களை ராகுல் காந்தி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கோஷ்டி பூசலில் சிக்காமல் உள்ளதாக கருதப்பட்ட திருநாவுக்கரசரை நியமித்தால் மற்ற தலைவர்களை முறையாக வழி நடத்தி செல்வார் என்று ராகுல் காந்தி எண்ணினார்.
இதற்கிடையில் ப.சிதம்பரத்திற்கும் திருநாவுக்கரசுக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்க கூடாது என்று முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார். அவரின் கருத்துக்கு ஆதரவாக 39 மாவட்ட தலைவர்களும் கடிதமும் அனுப்பினர்.
இதனால் ராகுல் கடும் அதிருப்தி அடைந்தார். தமிழக காங்கிரசில் நிலவி வரும் கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சரியான தலைவரை நியமித்தால்தான் வழி நடத்தி செல்ல முடியும் என்று கருதினார்.யாரை தலைவராக நியமித்தாலும் பிரச்சினையை உருவாக்க நினைக்கும் கோஷ்டி தலைவர்களை சமாளிக்க ஒரே வழி மட்டுமே உள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.
தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்ற நிலைக்கு ராகுல் தள்ளப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஏற்கனவே பரிசீலித்த பெயர்களை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு தலித் இனத்தை சேர்ந்த விஸ்வநாதன் அல்லது ஜெயக்குமாரை தலைவராக நியமித்து விடலாமா என்ற யோசனையில் ராகுல் காந்தி உள்ளார்.
இது நாள் வரை காங்கிரசின் பின்புலமாக இருந்து வரும் தலித் இன ஓட்டு வங்கி நோக்கி தமிழக பா.ஜ.க.வினர் வேகமாக செல்லும் நிலையில் தலித் இனத்தை சேர்ந்த ஒருவரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்தால் கட்சிக்கு நல்லது என கட்சி மேலிட பார்வையாளர் முகுல்வாஸ்னிக் சொன்ன விவரங்களை வைத்து தலைமை இந்த முடிவை மேற்கொள்ளலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.