உலகின் முதல் பெண் பிரதமரும் வேர்விட்ட இனவாதமும்

261 0

1959இல் பண்டாரநாயக்கவின் கொலை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு உள்முரண்பாடுகளால் ஊசலாடியது என்பதையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் வெளிக்கொண்டுவந்தது. இனிமேலும் இலங்கையின் பௌத்த பிக்குகள் அனைத்தையும் துறந்த துறவிகள் அல்ல என்ற ஏற்கக் கடினமான உண்மையை பொதுவெளிக்குக் கொண்டு வந்தது. ஆனாலும், அதன் புனிதத்தை எப்படியாவது கட்டிக்காக்க வேண்டிய தேவை சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு இருந்தது. இந்நெருக்கடியைத் திசைமாற்றத் தமிழருக்கு எதிரான இனத்துவேசம் பெருமளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

பண்டாரநாயக்கவின் கொலைக்கான காரணம் வர்த்தகப் பிணக்காக இருந்தபோதும், தமிழர்களுக்கு சலுகைகளை பண்டாரநாயக்க வழங்கியதே நான் அவரைக் கொலை செய்ததற்கான காரணம் என சோமாராமா தேரர் சொன்ன வாக்குமூலம் முக்கிய இடத்தைப் பெற்றது. இலங்கை அடுத்த அரைநூற்றாண்டு கால அரசியலின் தீர்மானகரமான குரலாக அது ஒலித்தது. அது இயல்பாக நடந்த ஒன்றல்ல. திட்டமிட்டுக் கட்டி வளர்க்கப்பட்ட ஒன்று.

பண்டாரநாயக்காவின் எதிர்பாராத இறப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் வெற்றிடத்தையும் நெருக்கடியையும் உருவாக்கியது. அடுத்த நிலையிலிருந்த
சி.பி.டி.சில்வா மருத்துவத்திற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். பண்டாரநாயக்க கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் சி.பி.டி.சில்வா விஷமிடப்பட்ட பாலை உட்கொண்டதால் சுகவீனமானார். இப்பால் உண்மையில் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கானது என்றும் இதைத் தற்செயலாகவே சி.பி.டி.சில்வா அருந்தினார் என்பதும் இன்னொரு கதை. பண்டாரநாயக்க கொலையோடு தொடர்புடைய பல அவிழாத மர்மங்களில் இதுவும் ஒன்று.

பண்டாரநாயக்கவுக்கு அடுத்த நிலையிலிருந்த சி.பி.டி.சில்வா நாட்டில் இல்லாமையால் டபிள்யு.தகநாயக்க இடைக்காலப் பிரதமரானார். இவர் தனக்கு எதிரானவர்களைப் பதவியிலிருந்து அகற்றி தனக்கான புதிய அமைச்சரவையை நிறுவினார். பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தல்களை அறிவித்தார். இன்று கட்சி தாவுகின்ற அரசியல்வாதிகளுக்கு தகநாயக்க முன்னோடி.

1960ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றாலும் அது ஆட்சியமைக்கப் போதுமானதாக இருக்கவில்லை. 15 ஆசனங்களை வென்ற தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முயன்றது. தமிழ்க் காங்கிரசுடனான ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கம், ஐக்கிய தேசியக் கட்சி குறித்த அவநம்பிக்கை ஆகிய காரணங்களால் ஆட்சியில் பங்கேற்கத் தமிழரசுக் கட்சி மறுத்துவிட்டது.

1958 கலவரத்தின் மீதான பழி பண்டாரநாயக்கவையே சேர்ந்தாலும் அதில் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை தமிழரசுக் கட்சி அறிந்திருந்தது.  பெரும்பான்மை இல்லாத நிலையிலும்  ஆளுநர் நாயகம் ஒலிவர் குணதிலக்க ஆட்சியமைக்க அழைத்தார். சிம்மாசன உரையில் அரசாங்கம் தோல்வியடைந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

இடைக்கால நிர்வாகத்தை நடாத்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இரண்டு சலுகைகளை அறிவித்தது. முதலாவது, அரிசியை மானிய விலையில் விற்பனை செய்வது. இது தேர்தல்களில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான உத்தி. இரண்டாவது, பஸ்களில் மதகுருமாருக்கென தனியான இருக்கைகள் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு. இக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கோ, கைக்குழந்தைகளுடன் பயணிப்போருக்கோ, ஊனமுற்றோருக்கோ, வயது மூப்படைந்தோருக்கோ தனியான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி தன்னுடன் கூட்டரசாங்கம் அமைக்க இணங்காததாலும் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வலுவான கூட்டணியில் தமிழரசுக் கட்சி பங்கேற்கலாம் என்ற அச்சத்திலும் மிக மோசமான இனவாதப் பிரசாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்தது. தேர்தலுக்கு அண்மையாக இலங்கையை இரண்டாகப் பிரித்து வடக்குக் கிழக்கைத் தமிழரசுக் கட்சியிடம் கையளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடன்பட்டுள்ளது என்ற விசமத்தனமான பிரச்சாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்தது. இது சிங்கள சமூகத்தில் நாட்டை இரண்டாகப் பிரிக்கவே தமிழர்கள் முயல்கிறார்கள் என்ற ஆழமான விதையைத் தூவியது.

தகநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனியாகக் கட்சி தொடங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்த சி.பி.டி.சில்வா பாரிய நெருக்கடிகளைக் கட்சிக்குள் எதிர்நோக்கினார். இதனால் பண்டாரநாயக்கவின் துணைவியாரான சிறிமாவோ பண்டாரநாயக்கவை அரசியலுக்கு அழைத்து வருவது நிகழ்ந்தது. இந்த முடிவில் இரண்டு விடயங்கள் செல்வாக்குச் செலுத்தின.

முதலாவது பண்டாரநாயக்கவின் கொலையை முன்வைத்து அனுதாப வாக்குகளைப் பெற சிறிமாவோ முக்கிய காரணியாக இருப்பார் என்ற கணிப்பு. இரண்டாவது, சிறிமாவோ தலைமையை ஏற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி கொவிகம வெள்ளாளரிடமே தொடர்ந்து இருக்கும். குறிப்பாக சலாகம சமூகத்தைச் சேர்ந்த சி.பி.டி.சில்வாவைத் தலைவராக ஏற்க கொவிகம மேட்டுக்குடியினரோ ஏனைய செல்வாக்குள்ள பிற சிறுபான்மைச் சாதியினரும் தயாராக இருக்கவில்லை. தேர்தல் அரசியலில் சாதி வகித்த தவிர்க்கவியலாத பங்கு சி.பி.டி.சில்வாவை ஓரங்கட்டுவதிலும் சிறிமாவோ பண்டாரநாயக்கவை கொண்டுவருவதிலும் முக்கிய பங்களித்தது.

தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஆனால், மிகவும் முக்கியமான இதற்கு முந்தைய தேர்தலில் 27.6 மூமான வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் 37.5 மூமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த வாக்கு அதிகரிப்புக்கான காரணங்கள் இரண்டு.

1. ஐக்கிய தேசியக் கட்சி தனது இனவாதப் பிரசாரத்தை அதிகரித்திருந்தமை

2. மானிய விலை அரசி என்ற சலுகையை வழங்கியமை

இது இலங்கை அரசியலின் முக்கியமான ஒரு அம்சமாகும். இலங்கையில் தேர்தலை மையப்படுத்திய சலுகை அரசியலைத் தொடக்கி வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியே. அதேபோல சிங்கள மக்களின் வாக்குகளுக்கு இனவாதம் பேசுவது பலனளிக்கும் என்று அரசியல் கட்சிகள் கற்றுக்கொண்டதும்
இந்தத் தேர்தலிலேயே.

எவ்வித அரசியல் அனுபவமும் அற்றவரான பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அவரது தலைமைத்துவத்தின் கீழேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டது.
சிறிமாவோ மூதவை (செனட்) உறுப்பினராகவே பாராளுமன்றம் சென்று பிரதமராகி உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். வேறொரு பாராளுமன்ற உறுப்பினரைப் பதவி விலக வைத்து, அவ்விடத்துக்குப் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவராக சிறிமாவோ வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் போட்டியிடாமலே தெரிவான பிரதமராகவே 1965 வரை அவர் இருந்தார். உலகின் முதலாவது பெண் பிரதமர் மக்களால் தெரிவுசெய்யப்படாதவர் என்பது பேசப்படுவதில்லை. இனவாதம் முக்கிய அரசியல் கருவியாக மாறிய நிலையில், அரசின் அன்றாட அலுவல்களிலும் திட்டமிடலிலும் இனவாதம் மெதுவாக வேர்விடத் தொடங்கியது.

இதற்கு சிறந்த உதாரணம் 1961இல் பிரித்தானியப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கான அரசின் விஞ்ஞானப் புலமைப் பரிசிலானது அதற்கு தகுதியானவரும் கொழும்புப் பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மாணாக்கருமான கணேசர் சண்முகத்திற்கு வழங்கப்படாமல்

வி.கே.சமரநாயக்கவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதற்கு சண்முகமே தகுதியானவர் என்று சொல்லி அப்புலமைப்பரிசிலை ஏற்க வி.கே.சமரநாயக்க மறுத்துவிட்டார். பின்னர் சண்முகத்தின் வற்புறுத்தலினாலேயே சமரநாயக்க அப்புலமைப்பரிசிலை ஏற்றுக் கொண்டார்.

இவரே இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை என அறியப்படுபவர். கணேசர் சண்முகம் உலகின் நன்கறியப்பட்ட வானியல் இயற்பியலாளராவார். இவரது சூரியனைச் சுற்றும் சிறுகோள்கள் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை. இதனாலேயே ஒரு சிறுகோளுக்கு 16107 Chanmugam என்று பெயரிடப்பட்டது. இந்நிகழ்வு பல்கலைக்கழகங்களுக்குள்ளும் இனவாதம் புகுந்து கொண்டதை எடுத்துக்காட்டியது.

டிசம்பர் 31,1960இல், சிங்களத்தை நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக மாற்றும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, மறுநாள் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக இருப்பதால், அரசாங்க ஊழியர்கள் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் கற்றுக் கொள்ள வேண்டும். இக்கொள்கை தமிழர்களுக்குக் கடுமையான அடியாக அமைந்தது, அவர்களுக்கு அரச சேவையே முக்கிய வேலைவாய்ப்பாக இருந்தது.

1956இல், நிர்வாக சேவைகளில் 30 சதவீத வேலைகளை தமிழர்கள் வகித்தனர். 1975ஆம் ஆண்டளவில், அந்த எண்ணிக்கை 5 சதவீதமாகக் குறைந்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக வெற்றிகரமான போராட்டங்கனை தமிழ் அரசியல் தலைவர்களால் முன்னெடுக்க முடியவில்லை.