வடசென்னை, அத்திப்பட்டில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல்செயல்படத் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரி மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தும், கோடைக் காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உயர்ந்தும் காணப்படும். மின் தேவையைப் பூர்த்திசெய்ய மின்வாரியம் தனது சொந்த உற்பத்தியைத் தவிர, தனியார் காற்றாலை நிறுவனங்கள், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. இந்நிலையில், மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தமிழ்நாடு மின்வாரியம் வடசென்னையில் உள்ள அத்திப்பட்டில் 800மெகாவாட் திறனில் புதிய அனல்மின் நிலையத்தைக் கட்டி வருகிறது.ரூ.6,500 கோடி செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் நிலையத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் மின்னுற்பத்தி தொடங்கப்படுகிறது.
கரோனா தொற்றால் தாமதம்: கடந்த 2019-ம் ஆண்டே இந்த அனல்மின் நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திறப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டது. இந்த அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி ஒடிசா மாநிலம் தால்ச்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்கள் மற்றும் தெலங்கானா மாநிலம் சிங்கரேனி ஆகிய சுரங்கங்களில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது.
6 சதவீத நிலக்கரி இறக்குமதி: இவை தவிர, ஒடிசா மாநிலம் மகாநதி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வழங்குமாறும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து 6 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியையும் மத்திய அரசிடமிருந்து மின்வாரியம் பெற்றுள்ளது. இதன்மூலம், இந்த அனல்மின்நிலையம் முழு அளவில் செயல் படத்தொடங்கும். அத்துடன், இந்த மின்நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் வரும் கோடைக் காலத்தில் மின்தேவையை சிரமமின்றி பூர்த்தி செய்ய முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.