மேலூர் புதுக்குடி கிராம மக்களின் மனிதநேயத்தை மறக்க முடியாது: ரயிலில் தவித்த பயணிகள் நெகிழ்ச்சி

90 0

கனமழையால் தண்டவாளம் பகுதியில் அரிப்பு ஏற்பட்டதால், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

வெள்ளம் பெருக்கெடுத்ததால் ரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக மீட்க முடியவில்லை. சுமார் 2 நாட்களுக்கு பின்னர் பயணிகள் 800 பேரும் மீட்கப்பட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டு, சென்னைக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரயிலில் இரண்டு நாள் தவிப்பு குறித்து திசையன் விளையைச் சேர்ந்த பயணி ஏ.சித்திரவேல் கூறும் போது, “கடுமையான மழையில் ரயிலுக்குள் சிக்கிக் கொண்டோம். உணவு ஏதும் கிடைக்காத நிலையில், ரயில் நிலையம் அருகே இருந்த பெட்டிக் கடையில் பிஸ்கட், பழங்கள் மற்றும் தின் பண்டங்களை வாங்கி வந்து, ஒருவருக்கொருவர் பகிர்ந்து சாப்பிட்டோம்.

ரயில் நிலையம் அருகே உள்ள மேலூர் புதுக்குடியைச் சேர்ந்த கிராம மக்கள், எங்களையெல்லாம் அங்கு அழைத்துச் சென்று பத்திரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் உணவு தயாரித்து மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கினர். நேற்று முன்தினம் காலையும் அவர்கள் தான் உணவு வழங்கினர். மழை வெள்ளத்தால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களுக்கும் உதவிய மனித நேயத்தை என்றும் மறக்க முடியாது. கிராம மக்கள் வழங்கிய உணவு தான் எங்களை உடல் பலகீனமின்றி வைத்திருந்தது. அவர்கள் உதவவில்லை என்றால் நாங்கள் சோர்ந்திருப்போம்” என்றார்.