இச்சூழ்நிலையில் தொழில் துறையானது பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மிகவும் வீழ்ச்சி நிலையை எட்டியுள்ளதாகவும், இதனால் சொத்து ஏலம் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பரேட் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கருத்துத்தொன்றை தெரிவித்தே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை (20) இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும்,நுண்,சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றனர் என்றும்,இந்தத் தொழில்கள் வீழ்ச்சியடைந்தால்,பொருளாதாரம் விருத்தியடையாது சுருங்கும் என்றும்,இதன் காரணமாக பணவீக்க அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்ட அதிகரிப்பு, மூளைசாலிகளின் வெளியேற்றம் அதிகரிப்பதுடன் அரசாங்க வரி வருமானமும் அதிகரிக்குமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும்,வங்கியின் ஸ்திரத்தன்மைக்கு தாக்கம் இல்லாத வகையில் இதில் தலையிட்டு,வங்கியின் ஸ்திரத்தன்மையைப் பேண பிரத்தியேக நிதியத்தை உருவாக்குவது மற்றும் பரேட் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது ஆகியவற்றில் உடனடி கரிசனை காட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நிதியத்தை நிறுவ சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும் என்றும்,இது தொடர்பில் அந்நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு சார்ப்பான நட்பு வட்டார தொழிலதிபர்கள்,அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று,கடனை செலுத்தாமல்,கடன் ஒப்பந்தங்களில், தங்களுக்கு சாதகமாக திருத்தங்களை செய்துள்ளனர் என்றும்,இவ்வாறு கடன் பெற்றவர்களுக்கு ஒரு கவனிப்பும்,நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு தனியான கவனிப்பும் வழங்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்வது குறித்து கவனம்
செலுத்தி,உடனடி தீர்வை எடுக்க வேண்டும் என்றும்,இப்பிரச்சினையில் இருந்து அரசாங்கம் இனுமேலும் தலையிடாதிருக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பரேட் சட்டத்தை தற்காலிகமாக கைவிட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,இப்பிரச்சினைக்கு அரசாங்கம் நேரடித் தீர்மானத்தை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.