ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா உட்பட நால்வரின் பெயர் பரிந்துரை

92 0

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா உட்பட நால்வரின் பெயர் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரை உத்தியோகபூர்வ தீர்மானமேனும் எடுக்கப்படவில்லை. இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நாங்களே ஆட்சியமைப்போம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டை சிறந்த முறையில நடத்தினோம்.திட்டமிட்ட வகையிலான முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன. இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களை எதிர்கொள்ள கட்சி என்ற ரீதியில் நாங்கள் தயாராகவுள்ளோம்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் வரிச் சலுகை வழங்கியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுக் கொண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மஹிந்த ராஜபக்ஸ, கோட்டபய ராஜபக்ஸ மற்றும் பஸில் ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள்.

ஆனால் தற்போது வரி அதிகரிப்புக்கு எதிராக விரிவுரையாளர்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வரி கொள்கை தொடர்பில்  கற்றவர்கள் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட கருத்துகள் குறிப்பிடப்படுpன்றன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உத்தியோகப்பூர்வ தீர்மானங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா உட்பட நால்வரின் பெயர் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஆனால் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. கட்சியின் செயற்குழுவில் கலந்துரையாடி வெகுவிரைவில் உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம்.

அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக கூடாது என்பதற்காகவே வற் வரிக்கு ஆதரவாக வாக்களித்தோம்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் அதற்கு எதிராக செயற்படுவோம் என்றார்.