பரேட் சட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் : சஜித் பிரேமதாஸ

71 0

பரேட் சட்டத்தை தற்காலிகமாக கைவிட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

பரேட் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல், கொரோனா தொற்று மற்றும் வங்குரோத்து நிலைமை ஆகிய 03 பேரழிவுகளை எதிர்கொண்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் சொத்துக்கள், வர்த்தக முயற்சியாண்மைகள் மற்றும் வளங்கள் நீதிமன்ற தலையீடு இன்றி பரேட் சட்டத்தின் (Parate execution) மூலம் உடனடியாக ஏலத்திற்கு விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதனால் தொழிலதிபர்கள் அழுத்தத்திற்கும் நிர்க்கதி நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

தொழில் துறையானது பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மிகவும் வீழ்ச்சி நிலையை எட்டியுள்ளது.
இதனால் சொத்து ஏலம் அதிகரித்துள்ளன.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

வங்கியின் ஸ்திரத்தன்மைக்கு தாக்கம் இல்லாத வகையில் இதில் தலையிட்டு, வங்கியின் ஸ்திரத்தன்மையைப் பேண பிரத்தியேக நிதியத்தை உருவாக்க வேண்டும்.

பரேட் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக அரசாங்கம் உடனடி கரிசனை காட்ட வேண்டும்.

அரசாங்கத்திற்கு சார்ப்பான நட்பு வட்டார தொழிலதிபர்கள், அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, கடனை செலுத்தாமல், கடன் ஒப்பந்தங்களில், தங்களுக்கு சாதகமாக திருத்தங்களை செய்துள்ளனர்.

இவ்வாறு கடன் பெற்றவர்களுக்கு ஒரு கவனிப்பும், நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு தனியான கவனிப்பும் வழங்கப்படுவது தொடர்பாக அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.