இலங்கையில் 1956 ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுவந்திருக்கின்றன. இருப்பினும் நாட்டுமக்கள் எவரும் இனவாதிகளாகவோ அல்லது கடும்போக்குவாதிகளாகவோ இருந்ததில்லை. மாறாக அரசியல்வாதிகளே தமது அரசியல் சுயலாபங்களுக்காக இனவாதத்தை விதைத்து, இனங்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி வந்திருக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி உலகத்தமிழர் பேரவையின் ‘இமயமலை பிரகடனம்’ வரவேற்கத்தக்கதெனினும், இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வாக அரசியலமைப்புத்தீர்வே அமையவேண்டும் என்பதை அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைதிக்கான மதங்களின் இலங்கை பேரவையின் ஏற்பாட்டில் ‘அதிகரித்த பரப்புரை சமூக ஈடுபாடு மற்றும் சிறுவர்கள், குடும்பங்கள், சமூகங்களுக்கான நேர்மறையான நடத்தை விளைவுகள் குறித்து கற்றல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்’ நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை (19) கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி கலாநிதி ஜெஹான் பெரேராவும், அவரது தலைமையின்கீழ் இயங்கிவரும் தேசிய சமாதானப்பேரவை உறுப்பினர்களும் நீண்டகாலமாகப் பல்வேறு விடயங்களைச் செய்துவருகின்றனர். இருப்பினும் எமது நாட்டில் இடம்பெற்ற நீண்டகாலப்போரினால் சமூகத்தின் மத்தியில் மிகவும் ஆழமான பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு செயலாற்றிவருவோருக்கு அதுசார்ந்த உத்வேகத்தை வழங்குமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் 1956 ஆம் ஆண்டிலிருந்து இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் பதிவாகிவந்திருக்கின்றன. குறிப்பாக சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுவந்திருக்கின்றன. புதிதாக ஆட்சிபீடமேறும் ஒவ்வொரு அரசாங்கமும், அப்போது நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து, சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற வேளையில், அதற்கு கடும்போக்குவாதிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும்.
உண்மையிலேயே நாட்டில் பெரும்பான்மையான மக்கள் போரையோ அல்லது முரண்பாடுகளையோ எப்போதும் விரும்பவில்லை. அவர்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதையே முன்னிலைப்படுத்திவந்திருக்கின்றனர். அவ்வாறிருந்தும் இனங்களுக்கு இடையிலான அமைதி, நல்லிணக்கம் என்பன இன்னமும் சாத்தியப்படாமல் இருப்பதற்கு அரசியல்வாதிகளே காரணமாவர். இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை தமது தேர்தல் கோஷமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். எனது தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்திய போதிலும், அதன் பின்னரான காலகட்டத்தில் தமிழ் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தந்தை செல்வநாயகத்துடன் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, சமஷ்டிக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் அதனை ஏனைய தமிழ் தலைவர்கள் எதிர்த்தனர். அதேபோன்று சில பௌத்த தேரர்களையும் அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
என்னைப் பொறுத்தமட்டில் இலங்கை மக்கள் இனவாதிகளோ, கடும்போக்குவாதிகளோ அல்ல. மாறாக அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்ட சிலரே அவ்வாறு செயற்படுகின்றனர். ஏனெனில் நான் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வுகாணப்படவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை முன்னிறுத்தி போட்டியிட்ட உள்ளுராட்சிமன்றத்தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித்தேர்தல் ஆகிய மூன்றிலும் நாம் அதியுயர் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டினோம். எனவே இதனூடாக மக்கள் இனவாதிகள் அல்ல என்பது நிரூபணமாகின்றது.
நான் ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு 60 வயதில் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்றதன் பின்னர், தற்போது இனங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு இயங்கிவருகின்றேன். ஏனெனில் நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். அதேபோன்று இவையிரண்டுமின்றி எம்மால் நாடு என்ற ரீதியில் முன்நோக்கிப் பயணிக்கமுடியாது என்பதையும் நான் எனது அனுபவத்தின் மூலம் உணர்ந்துகொண்டேன்.
கல்வி, தொழில்வாய்ப்பு என அனைத்திலும் முன்னேற்றத்தை எட்டியிருந்தாலும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பட்டியலில் நாம் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே இருக்கின்றோம். ஏனெனில் எம்மிடமிருந்த அனைத்து வளங்களும் போரில் செலவிடப்பட்டன. அதனைச் செய்தவர்கள் போர் என்பது எவ்வளவு பெரிய வணிகம் என்பதை அறிந்துகொண்டார்கள். போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இப்போதும் பாதுகாப்புத்துறைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு அந்நிதி ஒதுக்கீடு அவசியமெனினும், இராணுவத்தினருக்கு மிகையான நிதியை ஒதுக்கவேண்டியதன் அவசியம் என்ன?
கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் இனரீதியான வன்முறைகளை முன்னிலைப்படுத்தியிருக்காவிடின் அவரால் (கோட்டாபய ராஜபக்ஷ) அத்தேர்தலில் வெற்றியீட்டியிருக்க முடியாது. உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் மாத்திரமன்றி, அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளும் இதில் உள்ளடங்குகின்றன. இருப்பினும் இரு வருடங்களுக்குள் அவர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.
அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தலைவர்கள், ஆசிரியர்கள் உள்ளடங்கலாக சகல துறைசார்ந்த தலைவர்களும் சமாதானத்தை வலியுறுத்தி மக்களிடம் பேசவேண்டும். நான் ஆட்சியிலிருந்தபோது உருவாக்கிய அரசியலமைப்பில் தற்போதைய 13 ஆவது திருத்தத்தை விடவும் பன்மடங்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதனை ஏனைய அரசியல் கட்சிகள் ஆதரிக்கவில்லை. தற்போது உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள் பௌத்த தேரர்களுடன் இணைந்து தீர்வு செயற்திட்டமொன்றை முன்மொழிந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருக்கின்றனர். அவை வரவேற்கத்தக்க விடயங்களாகும். இருப்பினும் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக அரசியலமைப்புத்தீர்வே இருக்கவேண்டும் என்பதை அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும்.
அதேபோன்று இப்போது தமிழ்மக்கள் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றனர். ஏற்கனவே மிகத்தாமதமடைந்துவிட்டது என்றாலும், இனியேனும் அரசாங்கம் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதன்விளைவாக சிங்கள பெரும்பான்மையின மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்துவிடக்கூடும் என ஜனாதிபதி அச்சமடையத்தேவையில்லை. ஏனெனில் நாட்டுமக்கள் இனவாதிகள் அல்ல என்றார்.