இமயமலை பிரகடனத்தின் அடுத்தகட்டமாக, அதனை உரியவாறு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பௌத்த தேரர்கள் உள்ளடங்கலாக சர்வமதத்தலைவர்களும், ஏனைய சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், மனித அபிவிருத்தி திருத்த நிலையத்தின் தலைவருமான களுபஹன பியரத்தன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அமைதிக்கான மதங்களின் இலங்கை பேரவையின் ஏற்பாட்டில் ‘அதிகரித்த பரப்புரை, சமூக ஈடுபாடு மற்றும் சிறுவர்கள், குடும்பங்கள், சமூகங்களுக்கான நேர்மறையான நடத்தை விளைவுகள் குறித்த கற்றல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்’ நிகழ்வு செவ்வாய்கிழமை (19) கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு, அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட ‘இமயமலை பிரகடனம்’ குறித்து கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாம் அண்மையில் புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத்தமிழர் பேரவையுடன் இணைந்து கைச்சாத்திட்ட ‘இமயமலை பிரகடனத்தை’ ஜனாதிபதியிடம் கையளித்தோம். நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் காணப்படும் இருபெரும் தடைகள் என விமர்சிக்கப்படுகின்ற புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள் ஆகிய இருதரப்பினரும் இணைந்து இப்பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் நான் உள்ளடங்கலாக பௌத்த தேரர்கள் சிலர் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டோம். அதில் உலகத்தமிழர் பேரவையின் அப்போதைய தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் ஆற்றிய உரை என்னை மிகவும் கவர்ந்தது. சிங்களவர்களுக்கு இந்த நாடு மாத்திரமே இருப்பதனால், இதனை இழந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சுவதாக அவர் கூறினார். சிங்களவர்களின் மனநிலை என்னவென்பதை முதன்முதலாக தமிழர் தரப்பிலிருந்து ஒருவர் வெளிப்படுத்தியிருப்பதாக நான் அவரிடம் கூறினேன்.
அதனையடுத்து இந்தத் தொடர்பு விரிவடைந்ததுடன், எமக்கும் உலகத்தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையில் நிகழ்நிலை முறைமையில் சில தொடர் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பின்னர் இருதரப்பினருக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன்போது நாம் நாட்டின் பல்லினத்தன்மை, பொறுப்புக்கூறல், அதிகாரப்பகிர்வு மற்றும் பொருளாதார மீட்சி என்பன பற்றி விசேடமாக எடுத்துரைத்தோம்.
அதன்படி கைச்சாத்திடப்பட்ட ‘இமயமலை பிரகடனம்’ அண்மையில் ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்கள், ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கையளிக்கப்பட்டது. இப்பிரகடனத்தின் அடுத்தகட்டமாக, இதனை உரியவாறு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பௌத்த தேரர்கள் உள்ளடங்கலாக சர்வமதத்தலைவர்களும், ஏனைய சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.