முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் சிக்கினர் !

108 0

முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (19)  சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட விசேட பொலிஸ் அணி மற்றும் விசேட அதிரடிப் படையினர்  குறித்த பகுதியில் உள்ள வீட்டிலே 914 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 34 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

 

 

கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிசார் அவர் வேறு ஒரு இடத்தில் இருந்து கஞ்சாவை பெற்றுக் கொள்வதை அறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அணியினரும் விசேட அதிரடி படையினரும் குறித்த நபரை கைது செய்வதற்காக சென்றபோது முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய கணவன் மனைவி இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்து 214 கிராம்  கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

இவர்களுக்கான பிரதான விநியோகஸ்தர்களை தேடும் பணிகளோடு குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற முல்லைத்தீவு பொலிசார் புதன்கிழமை (20) குறித்த நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.