மழை நின்றதால் குமரியில் திரும்பும் இயல்பு நிலை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிகிறது

105 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நின்றதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி மாலை வரை தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதனால் ஆறு, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு விநாடிக்கு 10,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. நாகர்கோவில், திருப்பதிசாரம், தோவாளை, சுசீந்திரம் பகுதிகளில் தாழ்வான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.

இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் தற்போது மழை நின்று வெயிலடிக்கிறது. இதனால் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது.

மலையோரப் பகுதிகளிலும் மழை இல்லாததால் கீரிப்பாறை, குலசேகரம், பேச்சிப் பாறை, திற்பரப்பு பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயம் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஊழியர்கள் பணியை தொடங்கினர். இயல்பு வாழ்க்கை திரும்பியது.

 

பேச்சிப் பாறை அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் 45.12 அடியாக உள்ளது. நேற்று காலையில் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,639 அடியாக குறைந்தது. அணையில் இருந்து 1,550 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.80 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1,849 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைபுரளும் தண்ணீர்.

1,432 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி மறுகால் பாய்கிறது. நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 25 அடியை எட்டியதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு மக்கள் குளிப்பதற்கு நேற்று 3-வது நாளாக தடை நீடித்தது. நாகர்கோவில் புத்தேரி, இறச்சகுளம், திருப்பதிசாரம், சுசீந்திரம், தோவாளை உள்ளிட்ட இடங்களில் நெல் வயல்கள், வாழைத் தோட்டங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தன.

தற்போது மழை நின்று தண்ணீர் வடிந்தாலும் பயிர்கள் அழுகி விட்டதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்களின் சேத மதிப்பீடு குறித்து கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.