தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே தென் மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புக்கு முக்கியக் காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று வந்த பழனிசாமி, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, பால், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து, தூத்துக்குடி பக்கிள்ஓடையில் வெள்ள நீர் செல்வதைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படகுகள் மூலம் மீட்டு, முகாம்களில் தங்க வைத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், படகுகள் எதுவும் வரவில்லை என்றும், கடந்த2 நாட்களாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிப்பதாகவும், எந்த அதிகாரியும் வந்துபார்க்கவில்லை, எந்த உதவியும்கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், தென் மாவட்டங்களில் இத்தகைய பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.
ஏற்கெனவே சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கியபோதும், தமிழக அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் சென்னை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இப்போதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.