பரந்தூர் விமான நிலைய அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பரந்தூர் விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு சார்பில்நேற்று காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரிய அனுமதி பெற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் 5 பேருந்துகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் கே.நேரு, சிஐடியூ மாவட்டச் செயலர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏகனாபுரம் ஊராட்சியும், நாகப்பட்டு, மகாதேவி மங்கலம், நெல்வாய் ஆகிய ஊராட்சிகளையும், 3,346 ஏக்கர் விவசாய நிலங்களையும் அழித்து விமான நிலையம் அமைக்கும் முயற்சியை கைவிடவேண்டும், இதற்காக வெளியிடப் பட்ட அரசாரணையை ரத்து செய்ய வேண்டும், வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்றவாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தை யொட்டி விவசாயிகள், பரந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கவும் திட்டமிட்டனர். இவர்கள் வருகையையொட்டி இவர்களை அச்சுறுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அங்கு போலீஸாரை குவித்தனர். மேலும் அனுமதிபெற்று ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தின் அருகே கைது செய்வதுபோல் 5 பேருந்துகளை கொண்டு வந்து நிறுத்தினர். இந்த அச்சுறுத்தலை மீறி 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பரந்தூர் விமான நிலையத்துக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.