ம.பி.யில் டைனோசர் முட்டையை குலதெய்வமாக வழிபட்ட மக்கள்: ஆராய்ச்சியில் தகவல்

85 0

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் பட்லியா கிராமத்தைச் சேர்ந்தவர் வெஸ்டா மண்டலோய் (40). இவர் உருண்டையான ஒரு பொருளை தனது முன்னோர்களின் வழியில் குலதெய்வமாக வணங்கி வந்தார். இதனை அவர்கள் ககர் பைரவ் என்று அழைக்கின்றனர். ககர் என்றால் நிலம் அல்லது பண்ணை, பைரவர் என்றால் இறைவன்.

இந்த குலதெய்வத்தை வணங்குவதால் விவசாய நிலங்களை, கால்நடைகளை பிரச்சினைகளில் இருந்தும், துரதிருஷ்டங்களில் இருந்தும் பாதுகாக்கும் என்பது அவரது முன்னோர்களின் நம்பிக்கை. அதனை அவரும் கடைபிடித்து இடைவிடாது பூஜைகள் செய்து வணங்கி வந்தார்.

மண்டலோயைப் போலவே தார் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் தோண்டும் போது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் பந்து போன்ற உருவங்களை அப்பகுதி மக்கள் குலதெய்வங்களாக கருதி வணங்கி வந்தனர். இந்த நிலையில், லக்னோவின் பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்சஸ் நிபுணர்கள் சமீபத்தில் அப்பகுதிக்கு சென்று ஆய்வுகளை நடத்தினர்.

அப்போது தார் பகுதி மக்கள் தெய்வமாக வணங்கும் பந்து போன்ற உருவம் டைனோசர்களின் முட்டை என்பது தெரிய வந்தது. இவை டைட்டானோசொரஸ் இனத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தார் பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.