இலங்கை – இந்திய மீன்பிடி துறையினர் கடல் எல்லையைத் தாண்டுவது உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் விடயமல்ல, மீனவர்களைக் கைது செய்யும்போது இரு நாடுகளும் நெகிழ்வான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என மாநிலங்களவைத் தலைவரும், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அண்மையில் சந்தித்தனர். கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரலாற்று காலமுதல் காணப்படும் நெருங்கிய உறவுகளை தொடர்ந்தும் வலுவான முறையில் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்திய சபாநாயகர் வலியுறுத்தினார்.
அத்துடன், தற்போதைய பொருளாதார நிலைமையின் போது இலங்கைக்குத் தொடர்ந்தும் பலமாக இருப்போம் என்றும் இந்திய மக்களவை சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையிலான குழுவினர் மாநிலங்களவைத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தங்கரை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாநிலங்களவைத் தலைவர், இலங்கையிலிருந்து இதுபோன்றதொரு தூதுக்குழு ஐந்து வருடங்களின் பின்னர் இணைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள ஆழமான உறவை மேலும் பாதுகாத்துப் பேணுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இரு நாட்டின் மீன்பிடித்துறையினர் கடல் எல்லையைத் தாண்டுவது உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் விடயமல்ல, மீனவர்களைக் கைதுசெய்யும்போது இரு நாடுகளும் நெகிழ்வான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் மாநிலங்களவைத் தலைவரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண்பது அத்தியாவசியமானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான தூதுக்குழுவினர் வலியுறுத்தினர்.