மின்சார பட்டியலுக்கமைய வறுமையை அளவீடு செய்து பயனாளிகளை தெரிவு செய்யுங்கள்

57 0

நலன்புரி கொடுப்பனவுகளுக்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்து வறுமை போன்ற விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கி பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும். மின்சாரப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்களைக் கொண்டு வறுமையை அளவீடு செய்ய வேண்டியது அவசியமாகும், ஆகவே சரியான அளவீட்டை அடிப்படையாக எடுக்கும்போது அதனை எவராலும் மறுக்கவோ அல்லது சவாலுக்கு உட்படுத்தவோ முடியாது என பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின்தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கடந்த வாரம்  அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்காக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், நலன்புரி நன்மைகள் சபையின் பிரதிநிதிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் புறக்கணித்திருந்தமையால் குறித்த செயற்பாடு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டதுடன்இ அவர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் கொடுப்பனவு போன்ற பிரச்சினைகளால் அவர்களின் சேவையைப் பெறமுடியவில்லை. இந்த நடைமுறையைப் பயிற்சி அதிகாரிகளின் ஊடாக மேற்கொண்டதன் காரணமாக நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கிராம மட்டத்தில் சமூக நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அஸ்வெசும இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இதற்கு சட்டரீதியான தடைகள் இல்லை என்பது இங்கு தெரியவந்தமையால் பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்து வறுமை போன்ற விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை ஆரம்பிக்குமாறும் ஆலோசனை வழங்கிய குழுவின் தலைவர்,

மின்சாரப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்களைக் கொண்டு வறுமையை அளவீடு செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தான் ஆரம்பதம்தில் இருந்து  வலியுறுத்தி வருவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும்,சரியான அளவீட்டை அடிப்படையாக எடுக்கும்போது அதனை எவராலும் மறுக்கவோ அல்லது சவாலுக்கு உட்படுத்தவோ முடியாது என்றும் தெரிவித்தார்.

வறியோருக்கான பட்டியலைத் தயாரிக்கும் தேசிய பணியில் இணைந்துகொள்ளத் தயாரா? என்றும் குழுவின் தலைவர் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளிடம் வினவினார். அஸ்வெசும செயற்பாட்டின் இரண்டாவது கட்டத்தில் தாம் இணைந்துகொள்கின்றபோதும்? 2002ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 21 மற்றும் 22 பிரிவுகளுக்கு அமைய பணியாற்றும்போது பொய்யான தகவல்களின் அடிப்படையில் தாம் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவதற்கும், தண்டனைக்கு உட்படுத்தப்படுவதற்குமான வாய்ப்புக்கள் இருப்பதால் இது குறித்த சட்ட ஏற்பாட்டை நீக்கித்தருமாறும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை காலமும் குறித்த சட்டப்பிரிவின் ஊடாக எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அசௌகரியமும் ஏற்படவில்லை எனக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.குறித்த சட்டத்தைத் திருத்துதல்,சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையில் எழுத்துமூல இணக்கப்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் நம்பிக்கை, நாட்டின் தேவையின் அடிப்படையில் சுமுகமான இணக்கப்பாட்டுக்கு அமைய பொறுப்பை நிறைவேற்றுதல் போன்று மாற்றுத் தெரிவுகளில் ஒன்றைத தெரிவுசெய்ய வேண்டும் என்றும்,வறியவர்களின் சூழலை நன்கு உணர்ந்து செய்யப்படவேண்டிய நடவடிக்கை என்பதால் குறித்த பணியை முன்னெடுப்பது முக்கியமானது என்றும் அவர் எடுத்துக் கூறினார்.

எவ்வாறாயினும் வாய்மொழி உடன்படிக்கைக்கு பதிலாக சட்டரீதியான குறித்த சட்டத்தைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் சமுர்த்தி அதிகாரிகள் வலியுறுத்தினர். அதன்படி,2002ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 21 மற்றும் 22 பிரிவுகளைத் திருத்துமாறு நிதி அமைச்சுக்கு குழு பரிந்துரைத்திருப்பதாகவும், இந்தப் பரிந்துரை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.