நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அனல் மின் உற்பத்தி செலவு குறைவடைந்துள்ளது. எனவே ஜனவரியில் மின் கட்டணம் குறைக்கப்படும் என்று மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அத்தோடு அடுத்த மாதம் முதல் வற் வரி அதிகரிக்கப்படவுள்ள போதிலும், மின் கட்டணம் அதில் உள்வாங்கப்படவில்லை என்பதால் வற் வரி அதிகரிப்பும் மின் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது என்றும், எவ்வாறிருப்பினும் வற் வரி அதிகரிப்பு எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் உட்பட சகல எதிர்க்கட்சிகளிடமிருந்தும், தொழிற்சங்கங்களிடமிருந்தும், ஏனைய தரப்புக்களிடமிருந்தும் ஜனவரி 3ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைகள், திருத்தங்கள், யோசனைகள் எழுத்து மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிடைக்கப்பெறும் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
ஜனவரியில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டரை மாத காலமாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நீர் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது.
அனல் மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதோடு, உற்பத்தி செலவுகளும் குறைவடைந்துள்ளன.
எனவே இதனால் இலங்கை மின்சாரசபைக்கு கிடைத்துள்ள இலாபத்தின் பயனை மக்களும் அனுபவிக்கும் வகையில் ஜனவரி விலை திருத்தத்தை மேற்கொள்ளும் போது மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தற்போது தொடர்ச்சியாக எரிபொருள் சுத்தீகரிப்பு இடம்பெறுவதால் அதன் ஊடாகவும் இலாபம் கிடைத்துள்ளது. எதிர்வரும் வாரங்களிலும் மழையுடனான காலநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின் உற்பத்திக்கான எரிபொருள் செலவு மிகக் குறைவாகவே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சுத்திகரிப்பின் பின்னர் மேலதிகமாகக் காணப்படும் மசகு எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வற் வரியானது மின் உற்பத்தியில் தாக்கம் செலுத்தாது. எவ்வாறிருப்பினும் வற் வரி அதிகரிப்பானது எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தும்.
எனவே எரிபொருள் விலையில் எவ்வாறு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வற் வரி அதிகரிப்பால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும். இதற்காக எடுக்கக் கூடிய மாற்று தீர்மானங்கள் என்ன என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
ஜனவரியின் பின்னர் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தின் போதும் வற் வரி உள்ளடக்கப்பட மாட்டாது. மாறாக நிதி அமைச்சினால் வற் வரி அதிகரிப்பில் மின்சாரத்துறையும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டால் மாத்திரமே மின் கட்டணத்தில் வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும்.
இனி நாட்டில் எந்தவொரு சந்தரப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றார்.