வட மாகாணத்தில் பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, சுகாதார வசதிகளை வழங்குமாறு தமிழீழ விடுதலை இயக்க யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (19.12.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், எல்லோருக்குமான சுகாதாரத்தை ஒரளவு உறுதி செய்வதுடன் நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாப்பதற்கான உதவிகள் மற்றும் தொற்றா நேயாளர்களுக்கான உதவிகள் மக்களுக்கு மிக முக்கியமானவை.
டெங்கு, வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் விரைவாக பரவும் அபாயம் உள்ளதால் தூய குடிநீர் வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆகவே தன்னார்வ அமைப்புக்கள், அறக்கட்டளைகள், கொடையாளர்கள் போன்றோர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.