முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (19.12.2023) மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, விவசாய துறை சார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறுகிய காலத்தினுள் தொடர்ச்சியாக அதிக நிழல் மற்றும் ஈரப்பதனுள்ள வயல்களில் பரவும் வெண்முதுகு தத்தி நோய் குறித்தும், கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இரு மடங்கு மழைவீழ்ச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் தான் காரணமாக இருக்கின்றது.
எனினும் மழை வீழ்ச்சியானது எதிர்வரும் தை மாதம் இறுதிப்பகுதி வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டது.
இதன்போது விவசாயிகளுக்கு நெற்பயிரில் ஏற்படும் நோய்த்தாக்கம் தொடர்பில் விவசாய ஆராச்சி பிரிவின் உதவிப்பணிப்பாளர் சிறீஸ்வரலிங்கம் றாஜேஸ்கண்ணா அவர்கள் நோய்த்தாக்கம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள் மற்றும் மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.