சப்ரகமுவ ஆங்கில ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து விசேட கற்பித்தல் பயிற்சி

100 0

சப்ரகமுவ மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆங்கிலக் கல்வி கற்பித்தலில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கான முறைசார்ந்த பயிற்சியை வழங்கி அவர்களுடைய மொழியறிவு மற்றும் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துகின்ற இயலளவு விருத்தி வேலைத்திட்டமொன்று பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்கீழ் 700 ஆசிரியர்களைத் தெரிவு செய்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து  கற்பித்தல் அறிவுத் தேர்வு பாடநெறி மூலம் குறித்த ஆசிரியர்களுக்கு முறைசார்ந்த பயிற்சியை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாண சபையின் நிதியத்திலிருந்து முன்மொழியப்பட்டுள்ள பயிற்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்காக 51 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சப்ரகமுவ மாகாண சபை மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.