நுவரெலியாவில் கத்திக்குத்துக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி !

101 0

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் கத்திக்குத்துக்கு இலக்கான அதே தோட்டத்தை சேர்ந்த ஒருவர் பலத்த காயங்களுடன் இன்று (19) செவ்வாய்க்கிழமை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒலிபண்ட் தோட்டத்தை சேர்ந்த நான்கு பேரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

ஒலிபண்ட் தோட்டம் கீழ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 5 தேயிலை மலையில் 05 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஒருவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் குத்தகைக்கு வழங்கியுள்ளது.

குத்தகை காலம் முடிந்த நிலையில் இவ் விவசாய நிலத்தை தோட்ட நிர்வாகத்திற்கு வழங்குவதில் குத்தகைதாரர்களுக்கும்  தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நிலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் குத்தைகைகாரரான தனி நபர் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட நிலத்தை மீண்டும் தோட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குத்தகைகாரரான தனி நபர் தான் விவசாயம் செய்து வந்திருந்த தோட்ட நிர்வாகத்துக்குரிய நிலத்திலிருந்து விலகி அங்கு வைக்கப்பட்டிருந்த விவசாய பொருட்களை அகற்றுவதற்கு காலதாமதம் ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த நிலத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் பொறுப்பேற்ற தோட்ட நிர்வாகம் மீண்டும் அந் நிலத்தில் தேயிலை கன்றுகளை பயிரிட்டுள்ளது.

அதேநேரத்தில் நிலத்திலிருந்து அகற்றப்படாத தனது விவசாய பொருட்களை பாதுகாக்க அவ் விவசாய நிலத்தினை மேற்பார்வை செய்து வந்த ஒலிபண்ட் தோட்ட நபர் ஒருவரை காவலிலும் ஈடுப்படுத்தியுள்ள இந்த நிலையில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் காணி தகராறினால் நடந்தேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுவோர்கள் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தொழிலாற்றும் தோட்ட தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.