முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேர் 7 இடைத்தங்கல் முகாம்களின்தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தற்போது ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்களின் இயல்பு நிலை பல இடங்களிலே பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு புதுகுடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலே கூடுதலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக மிகப்பெரிய குளங்களாக இருக்கிற 20 குளங்கள் வான் பாய்கின்ற நிலையிலே சிறிய குளங்கள் அனைத்தும் வான் பாய்கின்றது இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள 402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள். 7 இடைத்தங்கல் முகங்களிலே தங்க வைக்கப்பட்டுள்ளார். சமைத்த உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்கி வருகின்றோம். அதேபோல் முல்லைத்தீவில் 1866 குடும்பங்களைச் சேர்ந்த 5558 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக கால்நடைகள் இறந்திருக்கின்றன. குறிப்பாக இடம் பெயர்ந்திருக்கும் மக்கள் காரணமாகவும் போக்குவரத்து காரணமாகவும் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளார் பிரிவுகளில் 8 பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளது. தற்போதுள்ள வெள்ளநிலை தொடர்ச்சியாக ஏற்படும் பட்சத்தில் அந்த பாடசாலைகள் நாளை மற்றும் நாளை மறு தினமும் இயங்குவதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்.
மக்களுக்கு அடிப்படையாக தேவையாக இருக்கும் பெட்ஷீட் மற்றும் சுகாதார சேவை தொடர்பான விடயங்களை அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க சுகாதாரத் திணைக்களம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இன்று நாங்கள் விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தை கூடியிருந்தோம் முக்கியமாக தற்போது ஏற்பட்டு வருகின்ற மஞ்சள்தத்தி நோயின் பரவல் காரணமாகவும் வெள்ளநிலைமை தொடர்பாகவும் முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இது தொடர்பாக பல்வேறு விடயம் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக குளங்கள் தொடர்பாக பல்வேறு குளங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் குளங்கள் புனரமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதேபோல் விவசாயிகள் வெள்ளப்பெருக்கு காரணமாக கணிசமான பயிர்கள் சேதம் அடையக் கூடிய வாய்ப்பிருக்கின்ற அதே வேளையிலே அது தொடர்பான இழப்பீடு எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் நாங்கள் இன்று கலந்துரையாடி இருக்கிறோம் என்றார்.