உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இலங்கையில் 10 இறப்புகளில் 8 இறப்புகள் தடுக்கக்கூடிய இறப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இம்மரணங்களுக்கு பிரதான இரு காரணியாக புகையிலை மற்றும் மதுசார பாவனை ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்தோடு எமது நாட்டில் மாத்திரம் மதுசாரம் அருந்துவதால் ஒரு நாளைக்கு சுமார் 40 – 50 மரணங்கள் ஏற்படுகின்றன.
மதுசார பாவனை எமது நாட்டுக்கு பெரும் சுமையாகும். கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற மதுசார வரித் தொகை ரூபா. 165.2 பில்லியன்களாகும். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) நடத்தப்பட்ட இலங்கையில் மதுபானக் கட்டுப்பாட்டுக்கான முதலீட்டு ஆய்வில் மதுசார பாவனையால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் பொருளாதார இழப்பு ரூபா 237 பில்லியன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எமது நாட்டு மக்கள் மதுசாரத்துக்காக ஒரு நாளைக்கு ரூபா 590 மில்லியன் மற்றும் சிகரட் பாவனைக்காக நாளொன்றுக்கு ரூபா 380 மில்லியன் எனும் பெருந்தொகையை செலவழிக்கின்றனர். இச்செலவீனம் ஒரு பாரிய பொருளாதார சுமையை விளைவிக்கிறது. இந்நிலைமைக்கு மத்தியில் மதுசாரம் மற்றும் புகையிலை நிறுவனங்களிடமிருந்து அரசாங்கத்துக்கு வரி வருவாயாக ஈட்டக்கூடிய பாரிய தொகையானது மதுசாரம் மற்றும் புகையிலை பொருட்களுக்கான முறையான வரிக் கொள்கையின்மையால் இழக்கப்படுகிறது.
மேலும், கஞ்சா போன்ற போதைப்பொருள் வகைகளை பயன்படுத்துவதால் பலர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரியின் கூற்றுப்படி, கஞ்சா பாவனையின் விளைவாக இளைஞர்களின் அறிவாற்றல் செயற்பாடுகளில் பாதகமான தாக்கம் ஏற்படுதல், மனநோய் ஏற்படுதல் மற்றும் கருவின் நரம்பியல் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புக்கள் போன்றன இளைய சமுதாயத்தினருக்கு ஏற்படுகின்றன.
2024 வரவு செலவுத் திட்டத்தில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவை மதுசார பாவனையை ஆரம்பிக்கும் வீதத்தை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். மேலும், மதுசாரம் அருந்துதல் மற்றும் மதுசாரத்தினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் என்பனவும் பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கலாம்.
2024 வரவு செலவுத் திட்டத்தில் மதுசாரத்தின் தாராளத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த பாவனையை அதிகரிப்பதற்கான பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டில் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு அரசாங்கம் பாராளுமன்றக் குழுவொன்றை நியமித்துள்ள அதேவேளை இவ்வாறான பரிந்துரைகள் வெளிவருகின்றமை கவலையை எழுப்புகிறது.
எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகள் சட்டவிரோத மதுசார பரவலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டவை என்ற ஒவ்வொரு பரிந்துரைக்கு பின்னாலும் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்வாறான பரிந்துரைகள் சட்ட விரோதமான மதுசாரத்தை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையல்ல, மாறாக எதிர்காலத்தில் மதுசார பாவனையையும் அதன் பிரச்சினைகளையும் அதிகரிப்பதற்கு இப்பரிந்துரைகள் காரணியாக அமையும்.
மதுசாரம், புகைப்பொருள் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறையில் பணிபுரியும் ஒரு பொறுப்பான அமைப்பாக கருத்தில் கொள்ளவேண்டிய பல முக்கிய விடயங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மதுசாரம் மற்றும் கஞ்சா தொழில்களுக்கு சாதகமாகத் தோன்றும் முன்முயற்சிகளை பாதீட்டு வாசிப்பு சுட்டிக் காட்டியுள்ளது. இது பின்வரும் முக்கிய கூறுகளைச் சேர்ப்பதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது:
மதுபானசாலையை திறக்கும் நேரத்திற்கான நெகிழ்வு தன்மை :
மதுபானசாலைகளை திறந்து வைக்கும் நேரம் அதிகரிக்குமிடத்து மதுசாரத்தின் தாராளத்தன்மை அதிகரித்து பாவனை அதிகரிப்பதற்கு சாரதமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
சட்ட ரீதியானதோ சட்ட விரோதமானதோ அனைத்து வகையான மதுசார வகைகளும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, நாட்டில் மதுசார பாவனையை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
கடந்த 1995இல் நிதி அமைச்சரால் இதேபோன்ற முயற்சி எடுக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் சட்ட விரோத மதுசாரத்தை கட்டுப்படுத்துவதற்கு பியர் விலைகள் 50 வீதத்துக்கும் அதிகமாக குறைக்கப்பட்டன. இதன் விளைவாக பியர் பாவனை அதிகரித்தது மற்றும் சட்ட விரோத மதுசார பிரச்சினைக்கு தீர்வுகள் எவையும் கிட்டவுமில்லை. WHOஇன் மதுசார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்படி, மதுசாரம் கிடைப்பதில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் வரிவிதிப்பு மற்றும் விலைக் கொள்கைகள் மூலம் மதுசாரம் கிடைப்பதைக் குறைத்தல் ஆகியவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, ஒரு நாட்டுக்குள் நிறுவப்படக்கூடிய மிகவும் செலவு குறைந்த மற்றும் பயன்கூடிய மதுசாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கான விதிமுறைகளின் திருத்தம்:
இந்த திருத்தம் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை முன்மொழிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும் சுற்றுலாவுக்குப் பிரபலமில்லாத இடங்களிலும் விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன. இது மதுசாரம் பரவலாகக் கிடைக்கும் நிலைமையை ஏற்படுத்தும் இதன் விளைவாக, மதுசார பாவனை அதிகரிக்கும். பொது சுகாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மீதான ஒட்டுமொத்த பாதிப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. மேலும் மதுசார பாவனை அதிகரித்து நாட்டிற்கும் பொது மக்களுக்கும் சுகாதார மற்றும் பொருளாதார சுமையை அதிகரிக்கும்.
மென் மதுசார உரிமங்களுக்கான கொள்கையின் அறிமுகம்:
மென் மதுசாரவகைகளை ஊக்குவிப்பது மற்றொரு தொழில்துறைக்கு சாதகமான உத்தியாகும். ஏனெனில் தயாரிப்பு அதிகரிப்புக்களுக்கு பங்களிக்கிறது. இறுதியில் மதுசார நுகர்வே அதிகரிக்கும்.
சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவு மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் ஒத்துழைப்பு : சர்வதேச தேவையுடன் மருத்துவ ஆலைகளுக்கு முதலீட்டாளர்களுக்கு உதவும்:
உள்நாட்டில் கஞ்சா தொழிலை உயர்த்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், கஞ்சா பயன்பாட்டுடன் தொடர்புடைய சுகாதாரக் கருத்தாய்வுகளுக்கு அப்பால் உலக அளவில், கஞ்சா தொழில் குறைந்த நிதி வருமானத்துடன் சரிவைச் சந்தித்து வருகிறது என்பதை வலியுறுத்துவது முக்கியமானது. இதன் விளைவாக, நாட்டிற்குள் கஞ்சாவை ஊக்குவிப்பது குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை அளிக்காது.
மேலும், தற்போது நாட்டின் சில பகுதிகளில் மன நோய்க்கான சிகிச்சை இடைவெளி சுமார் 67 வீதமாக உள்ளது. நாட்டின் மனநலச் சேவைகளால் ஏற்படும் நோய்ச் சுமையின் அதிகரிப்பைச் சமாளிக்க முடியாது.
தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான பரிந்துரையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியாக மதுசார வரியை அதிகரிப்பதை முன்மொழிந்துள்ளது. ஆயினும் கூட பாதீட்டு வாசிப்புகளில் மதுசாரம் மற்றும் கஞ்சா தொழில்களுக்கு சாதகமான கூறுகள் உள்ளன. IMF பரிந்துரைத்த பின்வரும் முயற்சிகள் முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை என்பதை நாங்கள் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
மதுசாரம் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை 20 வீதம் அதிகரிக்கவும்:
புகையிலை பொருட்களுக்கான முதலாம் கட்ட வரி அதிகரிப்பு 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டது. இதன் இரண்டாம் கட்ட வரி அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் செயற்படுத்தப்பட வேண்டும்.
ஜனவரி 2024க்குள் மதுவரிக்கான தானியங்கு குறியீட்டை பணவீக்கத்துக்கு ஏற்ப அறிமுகப்படுத்துங்கள்:
கலால் வரிவிதிப்புக்கான நிலையான அணுகுமுறையைப் பேணுவதற்கான முக்கியமான நடவடிக்கை. இந்தப் பரிந்துரைகளுக்கேற்ப, தற்போதைய பாதீட்டு; முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட சட்டபூர்வமான மதுசார வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்க வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அணுகுமுறை IMF மற்றும் WHO ஆகிய இரு அமைப்புக்களின் பரிந்துரைகளுக்கு ஏற்றாற் போல் அமைந்துள்ளது. மற்றும் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.