சேலம் – உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில், புறவழிச்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், வழியோரங்களில் உள்ள முக்கிய கிராமங்களில் விபத்துகளை தவிர்க்க, 14 இடங்களில் மொத்தம் ரூ.350 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலத்துடன் சென்னையை இணைக்கும், சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழி தேசிய நெடுஞ்சாலை ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களை சென்னையுடன் இணைப்பதாக உள்ளது. எனவே, சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில் நாளுக்கு நாள் வாகனப்போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த சாலையில் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், இலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலையானது, 4 வழிச்சாலைக்குப் பதிலாக இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது, இவற்றை 4 வழிச்சாலை கொண்டவையாக மாற்றியமைக்கும் பணி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இதனிடையே, சேலம்- உளுந்தூர்பேட்டை இடையிலான 4 வழிச்சாலையில், அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நிகழக்கூடிய இடங்களில், விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கிவிட்டது. இதனுடன் 14 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய சேலம் திட்ட அலுவலர் வரதராஜன் கூறியது: சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழிச் சாலையில், அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நிகழக்கூடிய 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாழப்பாடி, உடையாப்பட்டி ஆகிய இடங்களில், புறவழிச்சாலை தொடங்கும் இடம், முடிவடையும் இடம், ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையம், சாமியார் கிணறு, மணிவிழுந்தான் காலனி, தேவியாகுறிச்சி, தலைவாசல், மும்முடி, தியாகதுருகம் உள்பட 14 இடங்களில் தலா ரூ.25 கோடியில் மேம்பாலம், சர்வீஸ் ரோடு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. மேட்டுப்பட்டியில் மேம்பாலம் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், தலைவாசல், மும்முடி ஆகிய இடங்களில் பாலம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் சில இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் விரைவில் பணிகள் தொடங்கப்படும். ஒட்டுமொத்த பணிகளும் ஒன்றரை ஆண்டுக் குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.