மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி, தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது மத்திய அரசு. அதனை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை அன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் மத்திய அரசின் ஒருமனதாக உறுதி செய்தது நீதிமன்றம். இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
“சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பில் சட்ட ரீதியான மதிப்பு ஏதும் இல்லை. 2019-ல் ஒருதலைபட்சமாக சட்டம் இயற்றிய இந்தியாவின் இந்த நகர்வை சர்வதேச சட்ட விதிகள் அங்கீகரிக்காது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட வேண்டும். அதனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆதிக்கத்தை பாகிஸ்தான் ஏற்கவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக காஷ்மீர் மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் அதிகாரம் இழந்த சமூகமாக இருக்கின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.