நியாயமான மற்றும் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான வரிக்கொள்கையே எதிர்பார்க்கிறோம். வரி கட்டமைப்பை விரிவுபடுத்தாவிட்டால் வரி அதிகரிப்பு நாட்டுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பயனளிக்காது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக் அரசாங்கத்தின் வரி குறைப்புகளை எதிர்த்த மக்கள் தற்போது மீண்டும் வரி அதிகரிப்பை எதிர்ப்பதாகவும் இந்த வரிக்கொள்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வற் வரி அசாதாரண முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நியாயமான முறையில் வரிமுறைமையொன்று காணப்பட வேண்டும். அது பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும் காணப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் வரியின் அளவு அதிகரிக்கபட்டாலும் வரி கட்டமைப்பை விரிவுப்படுத்தாவிட்டால் வரி அதிகரிப்பு நாட்டுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பயனளிக்காது .
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வரி குறைப்புகளை எதிர்த்த மக்கள் தற்போது மீண்டும் வரி அதிகரிப்பை எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
வற் வரி குறைக்குமாறு எம்மால் கூற முடியாது. காரணம் ஏற்கனவே வரியின் அளவை குறைத்தமையால் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷவின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்யுமாறு கூறினர். போராட்டங்களை மேற்கொண்டு வரியை அதிகரிக்க செய்தனர்.
இந்த விடயத்தில் எதிர்க்கட்சிக்கு கருத்துக்களை கூற முடியாது. இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.வரியினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது.
தேர்தலில் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் தேசிய வரிக்கொள்கைகளை தமக்கு சார்பாக பயன்படுத்தக்கூடாது.
பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் எனது தனிப்பட்ட முடிவையே கட்சிக்கு அறிவித்தேன்.
நாட்டு மக்கள் வரியை செலுத்த முடியாது என கூறவில்லை. நியாயமான வரிமுறைமையேயே கோருகின்றனர். எனவே நியாயமான வரிக்கொள்கை ஒன்று காணப்பட வேண்டும் என்றார்.